சிரியா மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள் – ரஷ்யா, சிரியா, ஈரான் அரசுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டுமழை பொழிந்து சாதாரண பொது மக்களை கொல்வதை நிறுத்துங்கள் என்று ரஷ்யா, சிரியா, ஈரான் அரசாங்கங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் பல்வேறு குழுவினரை ராணுவத்தினர் பதிலடி கொடுத்து தாக்கி வருகின்றனர்.

இருதரப்பினரிடையே நடைபெற்றுவரும் சமரில் பல்லாயிரக்கணக்கான சாதாரண பொது மக்கள் உயிரிழக்கின்றனர். உயிர் பயத்தில் சுமார் 3 லட்சம் மக்கள் அருகாமையில் உள்ள துருக்கி நாட்டின் எல்லைப்பகுதியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதுதவிர, சிரியாவில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளில் சிலர் சிரியா-ஈரான்-துருக்கி எல்லைப்பகுதிகளில் பதுங்கி இருந்துகொண்டு அவ்வப்போது சிரியா ராணுவத்தினர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்துகின்றனர்.

குறிப்பாக, சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் போராளிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையில் உச்சக்கட்ட மோதல் நடந்து வருகின்றது.

அந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் அல்-கைதா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்-தாஹிர் அல்-ஷாம் குழுவினரை குறிவைத்து நடத்தப்படும் இந்த தாக்குதலில் ரஷ்யாவின் விமானப்படைகளும் இணைந்துள்ளன.

அத்துடன், பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு ஆதரவாக ஈரான் நாட்டு விமானப் படைகளும் இட்லிப் மாகாணத்தின் மீது தொடர்ந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த முத்தரப்பு தாக்குதலில் சிக்கி கடந்த ஒருவாரத்தில் மட்டும் அப்பாவி பொதுமக்களில் ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.

இந்த நிலையில், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டுமழை பொழிந்து பொது மக்களை கொல்வதை நிறுத்துங்கள் என ரஷ்யா, சிரியா, ஈரான் அரசுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானியாவுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வதற்காக புறப்பட்டு சென்ற ட்ரம்ப், முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ரஷ்யா, சிரியா மற்றும் ஈரான் நாட்டு படைகள் இட்லிப் மாகாணத்தில் குண்டுமழை பொழிந்து அப்பாவி பொதுமக்கள் பலரை கொன்று குவித்து வருகின்றன.

ஈவிரக்கமற்ற இந்த படுகொலைகளை உலகம் கவனித்து வருகிறது. எதற்காக இந்த தாக்குதல்? இதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? நிறுத்துங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்