கனத்த இதயத்துடன் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை நிறைவேற்றத் தயார்: ஹண்ட்

மாற்றீடுகள் எதுவும் இல்லாத பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் எதுவுமின்றி பிரித்தானியாவை வெளியேற்ற தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.

பிபிசி வானொலிசேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் ஹண்ட் கூறியதாவது;

“இறுதியில் உடன்பாடற்ற பிரெக்ஸிற் தான் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரெக்ஸிற் வாக்கெடுப்பின் முடிவை மக்களுக்கு வழங்குவதற்கான ஒரே வழியென்றால் அதை செய்வதற்கு நான் தயாராக உள்ளேன்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் எதுவுமின்றி பிரித்தானியாவை வெளியேற்றுவது வேறெந்த வழியும் இலலாத பட்சத்தில் என்னால் எடுக்கப்படும் இறுதி முடிவாகவே இருக்கும்.

கனத்த இதயத்துடன் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை நான் நிறைவேற்றுவேன் ஏனெனில் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றால் வர்த்தகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு பாரிய ஆபத்துகள் ஏற்படும்.

நல்ல ஒப்பந்தமொன்றுக்கு வாய்ப்பு இருந்தால் உடன்பாடற்ற பிரெக்சிற்றுக்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை எட்ட முடியுமென்ற நான் இன்றுவரை நம்புகிறேன்.

ஒக்டோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது சாத்தியமெனவே நான் நம்புகிறேன் ஆனால் அது இலகுவானதாக இருக்குமென நான் நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் தெரேசா மே-யின் பதவிக்காக போட்டியிடும் 13 கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினர்களில் ஜெரமி ஹண்ட்-டும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.