இந்தியாவிற்கு தமிழ் மக்கள் எப்போதும் பலமாக இருப்பார்கள் ; சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையிலே தமிழ் மக்கள் பலமாக இருக்கக் கூடியதான நிலைமைகளை ஏற்படுத்த இந்தியா முனைய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு தமிழ் மக்கள் எப்போதும் பலமாக இருப்பார்கள் என்பதையும் இந்தியா உணர்ந்து கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று மாலை யாழ் கந்தர்மடத்திலுள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவிறத்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது.

நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னரான சமகால நிலைமைகள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதில் முஸ்லிம் மக்களோடு சம்மந்தப்பட்ட அல்லது தொடர்புபட்டதாக தமிழ் மக்களின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுருந்தது.

அதேவேளையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் எவ்வாறாக அமைந்துள்ளது என்பது தொடர்பில் என பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும் இந்த ஒரு நிலைமையை பாவித்து அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இடர்களை விளைவிப்பதை நாங்கள் கண்டித்திருக்குன்றோம். இவ்வாறான நிலையில் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்ந்தோம்.

குறிப்பாக இந்தியாவிலே புதிய ஆட்சி மாற்றம் வந்திருக்கும் நிலையில் எதிர்காலத்தில் எமக்கு எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பிலும் அதற்கு எப்படியானதாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் பேசினோம்.

இந்தியாவினுடைய பாதுகாப்பு தமிழ் மக்களுடைய ஒருமைப்பாட்டின் அடிப்படையில் தான் ஊர்ஜிதப்படுத்தப்படும். இங்கு நாங்கள் பலமாக இருந்தால் தான் இந்தியாவும் பலமாக இருக்க முடியும்.

இன்றைய கால கட்டத்திலே இந்தியாவை சுற்றி பாகிஸ்தானும் பங்களதேசும் இருக்கிறது. இந்த இரண்டும் இஸ்லாமிய நாடுகள். அதிலும் பாகிஸ்தானிடம் அனு ஆயுத பலம் உண்டு. அதே நேரத்தில் சீனாவும் இந்து சமுத்திரத்திற்கு வழிசமைத்திருக்கிறார்கள். மேலும் இந்தியாவிலும் 20 கோடி முஸ்லிம் மக்கள் இருக்கின்றார்கள்.

இந்த அடிப்படையில் இன்றைய கால கட்டத்தில் தன்னுடைய பாதுகாப்புக்கள் சம்பந்தமாக பலவிதமான எண்ணங்கள் இந்தியாவிற்கு ஏற்படுவது சகஜம். அவ்வாறு கட்டாயம் ஏற்படலாம்.  இவ்வாறான நிலையில் இந்தியாவிற்கு நாங்கள் பக்க பலமாக இருப்போம் என்பதை இந்தியா உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆகவே தான் இலங்கையிலே தமிழ் மக்கள் பலமாக இருக்கக்கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்த இந்தியா முனைய வேண்டும். அதற்கேற்றவாறு நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.