ஜனாதிபதி, பிரதமரின் செயற்பாடு பாரிய விளைவினை ஏற்படுத்தும் – ஜே.வி.பி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முறையற்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில்  பாரிய  எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாநயக்க குறிப்பிட்டார்.

 

கடந்த அரசாங்கத்தில்  மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு நெருக்கடி  நேரங்களில் தேசிய வளங்களை பிற  நாடுகளுக்கு விற்றாரோ, அதன் தொடர்ச்சியையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னெடுக்கின்றார்கள். இரண்டு ஆட்சியாளர்களிடமும் எவ்வித வேறுப்பாடும் கிடையாது.

கடந்த மாதம் இந்தியாவில்  மக்களவை தேர்தல் இடம்பெற்றது  தேர்தல் பெறுபேறு வெளியாகும் மட்டும் இந்தியாவில் அரசாங்கம் ஒன்று கிடையாது. ஆனால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மேடை அபிவிருத்தி  தொடர்பிலான  ஒப்பந்தம் மே 28 ஆம் திகதி    இரு நாடுகளுக்கிடையில் கைசாத்திடப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் அரசாங்கம் ஒன்று  இல்லாத பட்சத்தில் பிறிதொரு  நாடு முக்கிய  ஒப்பந்தம் செய்துக் கொள்வது சட்டத்திற்கு முரணானதாகவும், ஜனநாயக கொள்கைகளுக்கு  முரனானதாகவும்  காணப்படும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முறையற்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில்  பாரிய  எதிர் விளைவுகளைநாட்டுக்கு ஏற்படுத்தும் என்பதை  உறுதியாக குறிப்பிட முடியும் எனவும் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.