யாழ்.நூலக கல்வெட்டில் பிழையான வரலாற்று திணிப்பு: திருத்தியமைக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கல்வெட்டில் காணப்படும் பிழையான வரலாற்றுத் திணிப்பை மாற்றி விரைவில் உண்மை வரலாறு எழுதப்படும் என மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவுபெற்றதையடுத்து நினைவுநாள் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்.பொது நூலகம் ஆசியாவின் மிகப்பெரிய பொக்கிஷமாக காணப்பட்டது. மேலும் நூலகத்தில் ஏராளமான அரியவகை புத்தகங்கள் மற்றும் ஏடுகள் என பல வரலாற்று நூல்கள் இருந்தன.

ஆனால் இதனை அழிக்கவேண்டுமென்ற ஒரே நோக்குடன் சில விஷமிகளால் திட்டமிட்டு இந்நூலகம் எரித்து அழிக்கப்பட்டது. பின்னர் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

நூலகத்தின் வரலாறானது, குறித்த நூலக வாயில் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. எனினும் அதில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று குறிப்பில் பிழைகள் இருப்பதாக எமது முன்னோர்களும் சபை உறுப்பினர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் இந்த பிழையை திருத்தியமைக்க வேண்டுமென மாநகர சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானத்தின் பிரகாரம் நூலக வரலாற்றில் பிழையான தகவல்கள் திணிக்கப்பட்டுள்ளனவா? என ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டு, குறித்த கல்வெட்டில் பிழை உள்ளதாக  இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய நூலக வரலாற்றை திருத்தியமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் இடம்பெற்று வருகின்றன” என்றார்.