படையினருக்கு முஸ்லிமகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்’

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களை தொடர்ந்து  நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்ததுவதற்காக   ஆயுதப்படையினரும், பொலிசாரும் அயராது உழைக்கும் இந்த  தருணத்தில் அவர்களுக்கு  தகுந்த  ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம் சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்வதாக மனித உரிமைகள்  அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் எம்.என்.எம். அசீம்  தெரிவித்தார்.

 

கடந்த 30 வருடகால யுத்தத்திலிருந்து மீண்டு 10 வருடங்கள் நாட்டில்  அமைதி நிலவியது. இவ்வாறான சூழ்நிலையிலேயே அமைதியை  சீர்குலைக்கும் வகையில் மிலேச்சத்தனமாக குண்டுத்தாக்குதல்  சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு அனைவரும் பொறுப்பு கூற  வேண்டியவர்களாகின்றோம். இதிலிருந்து  மீண்டு  நாட்டை  எழுச்சிப்பாதையிவ்  இட்டுச் செல்வதற்கான ஒத்தழைப்பை  வழங்க  வேண்டியது அனைவரதும் கடமையாகும்.

அவசரகால  சட்டம்  அமுலில்  உள்ள  இந்த தறுவாயில் சந்தேகத்தின்  பேரில் எவராயினும் கைதுசெய்யப்படும் பட்சத்தில் ஊடகங்களில் பெருமளவில் அந்த நபர் தொடர்பில்  பேசப்படுகின்றது. பின்னர்  அவர் நிரபராதியாக  விடுவிக்கப்படும் பட்சத்தில் அவர் தொடர்பிலான  கவனம்  செலுத்தப்படுவதில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அந்த நபரிற்கு சமூகத்தின் மத்தியில் இணைந்து வாழ்வதற்கான நிலையும், அவர்களது மனிதஉரிமையும் வெகுவாக  பாதிப்புக்குள்ளாகின்றது.

ஆகவே, இந்த விடயம் தொடர்பில் ஊடகங்கள்  பொறுப்புடன்  செயற்படவேண்டியது அவசியமானதாகும் எனவும் குறிப்பிட்டார்.