தாக்குதல்களின் பின்னணியில் சூழ்ச்சியுள்ளது – கிரியெல்ல

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகு வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகள் எல்லாமே ஐக்கிய தேசியக்கட்சி செல்வாக்குடன் இருக்கும் பகுதிகளாகும். எனவே இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் சூழ்ச்சியொன்று இருக்கிறது. ஐ.தே.கவின் செல்வாக்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதன் மூலம் அரசியல் அனுகூலம்பெற முயற்சிப்பவர்கள் யார் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும் என பாராளுமன்ற சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற துர்திஷ்டவசமான சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காகப் பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. அந்தத் தெரிவுக்குழுவின் முதல்நாள் அமர்வின் போதே ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த முதல்நாளே மிகவும் சர்ச்சைக்குரிய தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன.

 

துரதிஷ்டவசமான சம்பவங்கள் குறித்த விபரங்களை அறிந்துகொள்வதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. தெரிவுக்குழுவின் நகர்வை தொலைக்காட்சியில் ஒலி, ஒளிபரப்புவதற்கான தீர்மானத்தை சபாநாயகரே எடுத்தார் என்று கூறியிருக்கும் கிரியெல்ல, தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டத்தின் போது ஒளிபரப்பைக் குழப்புவதற்கு ஒருவர் முயற்சி எடுத்தார். அது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுகின்ற செயலாகும் என தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைக் குழப்புவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. அவர்கள் எதனை மறைக்க விரும்புகிறார்கள்? ஏப்ரல் 21 ஆம் திகதி உண்மையில் நடைபெற்றது என்ன என்பதையும் அரச நிர்வாகம் எந்த இடத்தில் தவறிழைத்திருக்கிறது என்பதையும் அறிந்துகொள்வதற்கான உரிமை நாட்டுமக்களுக்கு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.