கடந்தகால மனக்கசப்புக்களை மறந்து எதிர்கால நலன் குறித்து சிந்திப்போம் – சிறிதரன்

நாட்டிலே ஈழத்தமிழர்களும், இஸ்லாமியத் தமிழர்களும் ஒன்றிணைந்து, கௌரவமாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எம்முடைய தேவையாக இருக்கின்றது. அதனைக் கருத்திற்கொண்டு தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் நாங்கள் தீர்மானம் எடுப்போம். கடந்தகால மனக்கசப்புக்களை மறந்துவிட்டு, எதிர்கால நலன் குறித்து சிந்திப்பதெனில் இதுவே எமது தெரிவாக இருக்கின்ற என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தமது நிலைப்பாடு என்னவென்பதை அறிவிக்கவில்லை. குறித்த விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பாதுகாக்கும் விதமாக கூட்டமைப்பு செயற்படும் என்று எதிரணியினர் தெரிவித்துவரும் நிலையில், இதுபற்றி வினவிய போதே சிறிதரன் எம்.பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இணைந்த வடக்கு – கிழக்கு என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்துகின்றோமெனில் வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவும் எமக்கு தேவையாகும். வடக்கு, கிழக்கு மக்களின் நலனைக் கருத்திற்கொள்வதாக வெறுமனே வார்த்தைகளில் கூறிவிட்டு, முஸ்லிம் மக்கள் குறித்து சிந்திக்காமல் இருப்பது தவறாகும்.

அந்தவகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் நாங்கள் ரிஷாட் பதியுதீன் என்ற ஒரு தனிநபர் குறித்து சிந்திக்கவோ, கவனத்திற்கொள்ளவோ மாட்டோம். மாறாக அனைத்து முஸ்லிம் மக்களின் நிலை குறித்து சிந்தித்து, அவர்களின் நலன் கருதியே இவ்விடயத்தில் தீர்மானம் மேற்கொள்வோம்.

கடந்த காலங்களிலே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே சில மனக்கசப்புக்கள் காணப்பட்டன என்பது உண்மையே. அவர்களால் எமக்கு சில தீங்கான விடயங்கள் நேர்ந்ததைப் போன்றே, எமது தரப்பாலும் அவர்களுக்கு இடம்பெற்ற அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறிருக்கையில் பழைய மனக்கசப்புக்களை இன்னமும் மனதிலிருத்தி, எரியும் நெருப்பில் குளிர்காய நாங்கள் தயாராக இல்லை.