பிரே போர் நேசமணி’ ரி-சேட்டுகளுக்கு குவியும் ஓடர்கள்!

சமூக வலைதளங்களில் கடந்த 3 நாட்களாக உலகளாவிய ரீதியில் சூப்பர் ட்ரெண்டாகி வருகின்ற ஒருவரே நேசமணி…

அந்தடிப்படையில், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் அடிக்கடி மீம்ஸ்கள் பதிவிட்டு இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது பிரே போர் நேசமணி (pray_for_nesamani) நேசமணி என்ற மீம்ஸ்கள் கடந்த 3 நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விஜய், வடிவேலு, ரமேஷ்கண்ணா உள்ளிட்டோர் நடித்த ‘பிரண்ட்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் வெற்றியடைந்தது. இதில் நேசமணி பெயரில் பெயிண்டர் கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் காமெடி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது வடிவேலுவின் நேசமணி காமெடியை அண்மை செய்தியாக வெளியிடுவது போல மீம்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியா திருப்பூரை சேர்ந்த இணையத்தள ஆடை விற்பனையாளர் விமல் என்பவர், ரி-சேட் தயாரித்து வழங்கும் விற்பனையில் ஈடுபட்டார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அதே படத்தில் சில காட்சிகளுடனும் மற்றும் வேறு திரைப்படங்களில் வடிவேலு காமெடி காட்சிகளை வைத்து ரி-சேட் தயாரிப்பை அதிகரித்துள்ளார்.

அந்த ரி-சேட்டுகளுக்கு உள்நாட்டில் அமோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, வெளிநாட்டு ஓர்டர்களும் குவிந்து வருகிறது. நேசமணி கதாபாத்திரத்தை தொடர்புபடுத்தி வடிவேலு நடித்த மற்ற திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகளை இணைத்து மீம்ஸ்களையும், வீடியோக்களையும் நெட்டிசன்கள் அதிக அளவில் பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து நேசமணி கதாபாத்திர மீம்ஸ் ஆடை தயாரிப்பாளர் விமல் கூறியதாவது:-

இணையத்தள வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நான் அதில் வரும் வித்தியாசமான மீம்ஸ்கள் மற்றும் கருத்து படங்களை வைத்து டிசர்ட் தயாரிப்பது குறித்து யோசித்தேன். கடந்த 2 நாட்களாக பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகமாக பேசவும், பகிரவும் செய்யப்பட்ட வீடியோவாக வடிவேலுவின் நேசமணி காமெடி மீம்ஸ் வீடியோவை காண முடிந்தது.

உடனடியாக அந்த காட்சிகளை வைத்து ரி-சேட்டுகள் தயாரிக்க முடிவு செய்த பின்னர், டுபாய், சவுதி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் ஓடர்கள் வர தொடங்கி உள்ளன. அடுத்தடுத்த நாட்களில் ஓடர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த ரி-சேட்டில் நேசமணி படம், சுத்தியல் மற்றும் பிரே போர் நேசமணி என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ரி-சேட்டுகள் குறைந்தது ரூ.100 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.