பாரிஸ் நகர பிரதி மேயர் இலங்கை வருகிறார்!

சுற்றுலா, விளையாட்டுத்துறை மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குப் பொறுப்பான பாரிஸ் நகர பிரதி மேயர் ஜூன் பிரான்கொய்ஸ் மார்டின்ஸ் எதிர்வரும் ஜூன் மாதம் 5, 6 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த 2015 ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் சுற்றுலாத்துறையை மீளவும் கட்டியெழுப்புவதற்குக் கையாண்ட உத்திகள் தொடர்பில் பகிர்ந்துகொள்வதற்காக நிதியமைச்சினால் மார்டின்ஸ் அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கையின் உயரதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த முகவர்களைச் சந்தித்து மார்டின்ஸ் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

தொழில்நுட்ப உதவி வழங்கல், நெருக்கடி முகாமைத்துவம் ஆகியன தொடர்பில் உலக வங்கி மற்றும் அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவர் நிலையம் என்பன இணைந்து வழங்கும் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளும் மார்டின்ஸின் வருகையின் போது முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரான்ஸ் உலகிலேயே முதலாவது சுற்றுலாத்தலம் என்பதுடன் கடந்த ஆண்டு சுமார் 90 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பிரான்ஸிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.