வரணியில் சமத்துவம் கோரி சத்தியாக்கிரகப் போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

யாழ்.வரணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்களால் ஆலய வழிபாட்டில் “அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்! “ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது உறுதிப்படுத்தப்படவேண்டும்!” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆலய முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (28.05.2019) முற்பகல்-09 மணி முதல் இடம்பெறவுள்ள தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு பல அமைப்புக்கள்  முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.
இதுதொடர்பில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் க.ஆனந்தகுமாரசாமி , அமைப்பின் இணைச் செயலாளர்களான ச.தனுஜன், அ.சீவரத்தினம் ஆகியோர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முப்பது வருடங்கள் வரை திருவிழா இடம்பெறாதிருந்த இவ் ஆலயத்தில் கடந்த வருட தேர் திருவிழாவின் போது பக்தர்கள் எவரும் வடம் தொட அனுமதிக்கப்படாது இயந்திரம் கொண்டு தேர் இழுக்கப்பட்டமை அனைவரும் அறிந்தது. இந்நிலையில் இவ்வருட திருவிழாவை நடாத்தாது ஆலய நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ளமை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் ஆலய உபயகாரர்களும், அடியவர்களும் இணைந்து கடந்த வாரம் அடையாளப் போராட்டங்களைத் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்டிருந்தனர். இதில் அம் மக்களுக்கான தீர்வு வழங்கப்படாத நிலையில் அவர்கள் தமது போராட்டத்தைத் தொடர் சத்தியாக்கிரகமாக ஆலயச் சூழலில் முன்னெடுக்கவுள்ளனர்.
எனவே, ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கே இழுக்கை ஏற்படுத்துவதான சாதியப் பாகுபாடுகளைத் தகர்த்து ஆலய வழிபாட்டில் அடியவர்கள் அனைவரும் சமத்துவமாகக் கலந்துகொள்ளும் சூழலை உருவாக்க அமைதி வழியில் பாடுபடும் மக்களுடன் சமூக, அரசியல், ஆன்மீக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் இணைந்து செயற்பட முன்வரவேண்டுமெனவும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.