மீண்டும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது – ஞானசார தேரர்

நான் களைப்படைந்து விட்டேன். இனி போராடப்போவதில்லை என்று கூறினாலும் இளைஞர்களது கோரிக்கைக்கு இணங்கவும், மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டும் மீண்டும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மாகாநாயக்க தேரர்களை நேற்யை தினம் சந்தித்ததன் கண்டி – தலதா மாளிக்கைக்கு விஜயம் செய்த அவர், விஷேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

நான் சிறையிலிருந்து விடுதலையானதிலிருந்து ஒரு நாளைக் கூட நிம்மதியாகக் கழிக்க முடியாதளவிற்கு தற்போது நாட்டின் நிலைமை மிக மோசமாகக் காணப்படுகின்றது. எதிர்கால சந்ததியினருக்கான எமது சுக துக்கங்களை துறக்க வேண்டியுள்ளது. எனவே வெகுவிரைவாக பௌத்த சங்க சம்மேளனத்தைக் கூட்டி இதற்கான தீர்வினை காணப்பதற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மாகாநாயக்க தேரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஏனைய பௌத்த மதகுரமார்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளோம்.

இதனை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதையும், ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டிருப்பதையும் நிறுத்த வேண்டும். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து இதற்கான தீர்வினைக் காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.