நீராவியடி பிள்ளையார் கோயில் விவகாரம் – ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல்

முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல் நடாத்தி இனவாத கருத்துக்களாலும் தகாத வார்த்தைகளாலும் கொக்கிளாய் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பேசி அச்சுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மலை பிள்ளையார் கோவில் பெயர் பலகை நீக்கப்பட்டமையை கண்டித்து, பெயர் பலகையை மீள நாட்ட நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அப்பகுதி மக்கள் சென்ற போது, அங்கு அடாத்தாக விகாரை அமைத்து தங்கியுள்ள பிக்குவின் அழைப்பில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் ஊரவர்கள் அனைவரையும் நிலத்தில் அமர்த்தி அவர்களின் பதிவுகளை மேற்கொண்டனர்.

அது தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை படம் எடுக்க விடாது தடுத்த பொலிஸார், ஊடகவியலாளர்களை படம் எடுத்து அச்சுறுத்தினார்கள். அதேவேளை அப்பகுதியில் பிக்கு சிசிரிவி கமராக்களையும் பொருத்தி உள்ளார். அது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. குறித்த செய்தியினை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்களில் குமணனும் ஒருவராவார்.

இந்நிலையில் நேற்றைய சம்பவங்கள் தொடர்பில் இன்றைய தினம் சட்டத்தரணிகள் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து நீதிவான் சிசிரிவி கமராக்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.நீதிமன்ற உத்தரவையடுத்து குறித்த சிசிரிவி கமராக்களை அகற்றுமாறு பிக்குவிடம் பொலிஸார் கூறிய போதிலும் பிக்கு அதற்கு உடன்படவில்லை.

இந்நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொலிஸார் செயற்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களை புகைப்படம் எடுக்கவிடாது, பொலிஸார் தடுத்துள்ளனர். அதன் போது ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், தமிழர்கள் தொடர்பிலும் தகாத வார்த்தைகளால் பேசி , இனவாத கருத்துக்களாலும் பேசியுள்ளனர்.

அதேவேளை நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த சென்ற பொலிஸார் பிக்குவிற்கு சார்பாக செயற்பட்டனர் எனவும் குற்றம் சாட்டபட்டப்படுகின்றனர்.