மனித உரிமைகள் ஆணைக்குழு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு கடிதம்

வேறுபட்ட இன மற்றும் மதங்களைச் சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்வோர்களிடையே பாகுபாடின்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கடிதமனுப்பியுள்ளது.

 

கடந்த ஏபர்ல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படும் அதேவேளை இன, மத ரீதியிலான பாகுபாடு உயர்கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது காண்பிக்ககூடாது.

எனவே பல்கலைக்கழக ஆணைக்குவின் தலைவர் என்ற ரீதியில் இதனை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். பல்கலைக்கழகங்களில் தனித்தன்மையை நாம் அங்கீகரிக்கும் அதேவேளை எமது கோரிக்கை அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் சம்பந்தப்பட்டதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முஸ்லிம் மாணவர்கள் அவசர கால சட்ட விதிமுறைகளை கடைபிடிக்கும் அதே வேளை , பெண்கள் முகத்தை மறைக்காத போதும் தாம் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமை ஏற்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே இது தொடபிலும் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.