பாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளில் கையெழுத்திடக் கூடாது -ஜனாதிபதி ஐ.தே.மு. இற்கு உத்தரவு

அமெரிக்காவுடன் எந்தவொரு பாதுகாப்பு அல்லது பாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளிலும் கையெழுத்திடக்கூடாது என ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சராக தான் பதவியில் இருக்கும் நிலையில், பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு உடன்பாட்டைச்செய்து கொள்வதற்கும் தனது அனுமதி தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனாவிலிருந்து கொழும்பு திரும்பிய பின்னர், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம் இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வொசிங்டனில் தங்கியிருந்த திலக் மாரப்பன அமெரிக்கா – இலங்கை இடையிலான சர்ச்சைக்குரிய சோபா உடன்பாட்டின் சில விதிமுறைகள் குறித்த பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தபோதே ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

சோபா உடன்பாடு தொடர்பாக முன்னதாக கொழும்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

அதனை பகிரங்கப்படுத்தாமல், துரிதமாக உடன்பாட்டில் கையெழுத்திட அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் சில திருத்தங்களுடன் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு ஆதரவு தெரிவித்திருததாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.