காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

தென்மராட்சி மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிராக அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 10.00 மணிக்கு மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாலயத்துக்கு முன்னால் ஒன்றுதிரண்ட மக்கள் சுலோகங்களை ஏந்தியவாறு காற்றாலை அமைக்கப்படுகின்ற இடம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.

இதன்போது அங்கு இலங்கை மின்சார சபையின் காற்றாலை மின்உற்பத்தி பிரிவினரால் மறவன்புலவு தொடக்கம் நாவற்குழி வரையிலான கடற்கரை வீதி புனரமைப்பு பணிகள் இடம் பெற்றுக்கொண்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறித்த பணிகளை இடைநிறுத்தி வாகனங்களையும் இயந்திரங்களையும் அகற்றுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற சாவக்சேரி பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடனும் காற்றாலை பொறியியலாளருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன்போது காற்றாலை அமைப்பதால் தமது இயற்கை வளம் பாதிக்கப்படுகின்றது, மேலும் காற்றாலை அமைக்கின்ற இடங்களில் மரங்கள் தறிக்கப்படுகின்ற போது மாற்றீடாக புதிய மரங்கள் நடப்படுவதில்லை எனவும் காற்றாலை மின் உற்பத்தி தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு உரிய தெளிவுபடுத்தல் வழங்கப்படவில்லை எனவும் பிரதேச சபையின் உரிய அனுமதி பெறப்படாமல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இதன்போது காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் பொறியியலாளர் பொலிஸாருக்கு விளக்கமளிக்கையில் இந்த வேலைத்திட்டம் அரசாங்கத்தின் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு அனைத்துமட்ட அனுமதிகளும் பெறப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றது எனவும் மக்கள் கோரிக்கைவிடுப்பது போல் இயற்கை வளம் பாதிக்கப்படாதவாறு இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் தெரிவித்ததோடு காற்றாலை அமைப்பதற்கு அதனோடு தொடர்புபட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் வழங்கிய அனுமதிக் கடிதங்களையும் பொலிஸாருக்கு காண்பித்தார்.

இரண்டு தரப்புக்களுடனும் கலந்துரையாடிய பொலிஸார் நாளைய தினம் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் இரண்டு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடுவது என முடிவெடுத்தனர். இதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டதையடுத்து போராட்டம் முடிவுறுத்தப்பட்டது.