மறப்போம்.மன்னிப்போம்.முடியாவிட்டால்..பதவி துறப்போம்.

ஏதோ ஒரு வேகத்தில..
உங்களுக்கு…எதிரா..இயங்கினவர்களோட
கொஞ்ச காலம் இருந்திட்டோம்..
இயங்கிட்டோம்..
அதுக்காக..உங்களிடம்..
கேக்கிறம்…மன்னிப்பு..
நீங்களும் இத்தோட…
இந்த விசயத்த மறக்க வேணுமுங்கோ..

வரலாற்றறை கிளறிப்பாத்தா.
56..58..71..77..83..87..95. 2009..
என்டு. கணக்கா தமிழரை..
காவு கொண்டதைத்தான்..
கண்டபடி கதைக்கிறாங்கள்..
என்டாலும்..நீங்கள்..
சொல்லுமாப் போல்..
நாங்களும் மறக்கிறம்….மன்னிக்கிறம்..

எந்த தரப்பும்..போரில…
நேர்மையா..ஈடுபடுவதில்லை என்ற..
சின்னக் கதிர்காமத் தியரியை..
போன திங்கக் கிழமை தான்..
படிச்சதால..சினம் குறைஞ்சி..
மனம் தெளிவு கண்டிருக்குது..
கட்டாயம் மன்னியுங்கோ..
உன்னான நாங்கள்..
அப்பவே மறந்திட்டம்.

இனி….
வலிஞ்சு காணாமல் ஆக்கப்பட்டவர்கள்..
என்டதை..வடக்குக்கு வந்த..
ஐயான்ட விருப்பத்துக்காக..
வலிந்து காணாமல் போனவர்கள் என்றும்..
இனி..அவர்களைத் தேடுவது..
தேசத் துரோகம் என்டும்.
அத்திவாரம் வைக்கும் போது..
ஐயா சொன்னத எல்லாரும்..
ஆமோதிச்சு..மௌனமாய்
ஏற்றுக் கொண்டதால..

இதுவரை தேடினதுக்காக..
மன்னியுங்கோ…இனி கடைசி வரை..
தேட மாட்டோம் என்டதால..
மறந்திடுதுங்கோ…

இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட.
காணி ..இனி எங்கட காணி இல்ல..
அது…சேனநாயக்காவின்..
தேசவழமை சட்டத்தின் வாயிலாக..
கண்டிச் சிங்களவரின்..
பரம்பரைக் காணி என்டு..
மகாவம்சம் சொல்லும் உண்மை என்டு..
ஒத்துக்கொண்டு..
ஒப்புதல் வாக்கு மூலம்
இப்பவே தாறம்..

கேப்பாப்பிலவு காணிக்காக..
வீதி வீதியா கூக்குல் போட்டு..குளறி
தொண்டை கிளிய கத்துனதுக்காக..
மன்னிப்பு கேக்கிறம்……
மறத்துடுங்கோ…

அரசியல் கைதியோ…
அப்படி யாருமே உங்களிட்ட
இல்லையென்டு.இப்ப
தெரிஞ்சு போச்சு..

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக..
பாத யாத்திரை செய்த ….
பல்கலைக் கழக மாணவர்களை..
மன்னியுங்கோ…அவங்களை..
மறக்கச் சொல்லுறம்..நாங்கள்..

வெள்ளை நிறத்தில எந்த
வாகனமும் இலங்கையில ஓடையில்ல..
அப்ப எப்படி..
வெள்ளவான் கடத்தல்..என்டு..
வெக்கம் கெட்டதுகள் சொல்லுங்கள்..
உங்களான உதுகளையெல்லாம்..
மனசில வச்சி செஞ்சு போடாதையுங்கோ..
நாங்கள் மறந்திட்டம்..
உங்களையும் மன்னிச்சிட்டம்..

நீங்கள் அந்தக் காலத்தில..
எங்கட தலைவர தேரில ஏத்தி..
ஊர்வலம் போன கதைய..
எங்கட பாட்டன் கக்கூஸ் போகேக்க..
கனதரம் சொன்னவர்..
அவரின்ட பேரன அமைச்சராக்கின..
நீங்கள் தானே…வாழும் வீர்ரை..
ஏலாத மனிசனா இருந்தாலும்
எதிர்க் கட்சித் தலைவராக்கி…பிறகு..
தவிடு பொடியாக்கி..
மறப்போம் மன்னிப்போம்.

அதுக்குப் பிறகு எங்கட ஐயாவின்
தேசியத் தலைவர்
வடக்குக்கு வந்த தலைவருக்கு..
ஆப்பு அடிச்சதையும்…அதை..
சின்னக் கதிர்காமர் சிதர் தேங்கா அடிச்சு
சிம்மான்னம் ஏத்தினதையும்
மறப்போம் மன்னிப்போம்.

இலங்கை சுதந்திரத்துக்கு பிறகு..
ஈழத் தமிழர்களுக்கு..
தேனும் பாலுமே திகட்ட திகட்ட..
ஓடிய விசயம் இவங்கள்..
ஒருத்தருக்கும் தெரியாது…

அதால வந்த அறியாமை தான்..
ஈழப் போராட்டம்..
இதையும் நீங்கள்..
எள்ளளவும் எண்ணாமல்
மறக்க வேண்டும்…
மன்னிக்க வேண்டும்.

தாயக்க் கனவை மறப்போம்..
தம்பி நினைவை மறப்போம்..
தூய உறவை மறப்போம்..
கொடுந்துயரை மறப்போம்.
தேசம் அழிந்த்தை மறப்போம்..
தேகம் உடைந்த்தை மறப்போம்.
அங்கம் இழந்த்தை மறப்போம்..
கண் முன்னே அழிந்த்தை மறப்போம்..
செஞ்சோலை கொலையை மறப்போம்.
கிளாலி படுகொலையை மறப்போம்..
உண்ணாமல் உயிர் துறந்தவனையும்..
ஒரு துப்பாக்கிகாக என்னை சுடு..
என்றவனையும் மறப்போம்..
அங்கயற்கன்னியை மறப்போம்..
ஆனையிரவு வெற்றியை மறப்போம்..
அன்னை பூபதியை மறப்போம்..

நடந்த அத்தனையும் மறந்தால் தான்..
அவனியில் வாழ முடியும். என்றால்..
அம்மணமாக வாழ எனக்கு
அத்தனைக்கும் சம்மதம்..

என்னோடு வாழ எத்தனை பேர்..

இருக்கிறியள்…..இனி..
அம்மணமாய் வாழ….
அவர்களுக்கு வாக்களியுங்கள்..

போரை மௌனமாக்கி..
அடுத்த சந்த்தியிடம் கையளித்தான்..
அவன்….தலைவன்..

எல்லாவற்றையும் மறந்து…
ஆக்கிரமிப்பின் அடி கழுவி
அம்மணமாக்கி….அடிமையாக்கினான்.
இவன்….

மாணிக்கம் ஜெகன்