ரணிலும் மகிந்தவும் நாட்டை அழித்தது போதும்-அநுரகுமார பேட்டி

பாராளுமன்றத்தில் எவராலும் 113 ஐ பெற்று நிலையான ஆட்சியை உருவாக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இன்று பாராளுமன்றத்தின் பலத்தை தீர்மானிப்பது யாருடைய ‘பை’ பெரிதாக இருக்கின்றது என்பதை அடிப்படையாக வைத்தே என்று தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, ரணிலும் மகிந்தவும் நாட்டை அழித்தது போதும் என்றும் தெரிவித்தார்.

கேள்வி; அரசியல் நெருக்கடிக்கு நீங்கள் கூறும் தீர்வு என்ன?

பதில்; இந் நெருக்கடி தானாக உருவாகவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்ஷவும் இணைந்து உருவாக்கியது. நாட்டை நிலையான நிலைக்கு கொண்டுவர பாராளுமன்றமும் நீதித்துறையும் முன்னெடுத்த எல்லா செயற்பாடுகளும் முடிந்து விட்டது. இனி ஜனாதிபதி தான் ஏதாவது செய்ய வேண்டும்.

கேள்வி; பாராளுமன்ற பலத்தை யாருக்கு அளிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

பதில்; நான் நினைக்கிறேன் யாருக்கும் 113 பேரை பெற்று நிலையான ஆட்சியை உருவாக்க முடியாது என்று ஏனெனில் பாராளுமன்ற பலத்தை தீர்மானிப்பது யாரின் பை பெரிதாக உள்ளது என்ற காரணத்தில் தான். அதனால் புதிய தேர்தல் நடாத்துவதே சரியான வழி. அவ்வாறில்லாது யாரும் 113ஐ பெற்றுச் சென்றாலும் அவர்கள் ஆட்சி நீண்ட காலம் நிற்காது.

கேள்வி; உங்கள் கட்சி யாரின் ஆட்சியின் கீழ் செயற்பட விரும்புகிறது. ஏனெனில் 225 பேரும் கையெழுத்திட்டாலும் நான் ரணிலுக்குத் தரமாட்டேன் என ஜனாதிபதி கூறியுள்ளாரே?

பதில்; பிரதமராக ரணில் அல்லது ராஜபக்ஷ யார் வந்தாலும் எமக்கு பிரச்சினை இல்லை. ஏனெனில் இவர்கள் ஏற்கனவே பிரதமராக இருந்தவர்கள். அந்நேரத்தில் இவர்கள் என்ன செய்தார்கள் என மக்களுக்குத் தெரியும்.

கேள்வி; ஜனாதிபதிக்கு புதிய பிரதமரை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. அதை தீர்மானிப்பது அவர் தானே?

பதில்; ஆம். அக்டோபர் 26ஆம் திகதி நியமித்த பிரதமரை நம்பிக்கையில்லா பிரேரணையால் தோற்கடித்தோம். அதன் பிறகும் ஜனாதிபதி அதையே கெட்டியாகப் பிடிக்கக்கூடாது. ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது புதிய பிரதமர் ஆட்சியை நியமிக்கவே. அதனால் புதிய பிரதமர் புதிய ஆட்சியை நியமிக்குமாறு நாங்கள் அவருக்கு கூறுகிறோம்.

கேள்வி; சிறுபான்மை ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆட்சியும் அவ்வாறானதே. அப்படியிருக்கும் போது உங்கள் கட்சி ஏன் பாராளுமன்றம் கூடியதும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இது நியாயமானதா?

பதில்; சிறுபான்மை அரசாங்கம் இருந்தது எதிர்கட்சியின் ஆதரவோடு தான். ஆனால் இங்கு அவ்வாறான நிலை இல்லையே. இப்போதைய நிலை உருவானதற்கு அரசியல் சதியே காரணமாகும். இச் சதியில் முதலில் இருவர் இணைந்து ஆட்சியமைக்கின்றனர். பின்னர் அமைச்சர்களை விலைக்கு வாங்குகின்றனர். வாங்கும் வரையில் ஆட்சியை ஒத்திவைக்கின்றனர். இறுதியாக அது தோல்வியடைந்ததும் ஆட்சியை கலைக்கின்றனர். இச் சதி ஆரம்பத்திலிருந்தே தோல்வி தான். அதன் விளைவாகத் தான் 14ஆம் திகதி பாராளுமன்றம் கூடியது. இது ஜனாதிபதிக்கோ மகிந்தவுக்கோ விருப்பமில்லை. அவர்கள் சட்டவிரோத பலத்தைப் பெறவே விரும்பினர். அதனால் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சட்ட விரோதமான அரசை முறியடிக்கும் தேவையிருந்தது. அதனால் தான் நாம் வேகமாக செயற்பட்டோம்.

கேள்வி; ரணில் விக்ரமசிங்க மத்திய வங்கி தொடர்பில் குற்றஞ்சாட்டப்படும் போது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எடுக்க காலம் தாழ்த்தியபோது மகிந்தவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுத்தீர்கள்?

பதில்; ரணிலுக்கு எதிரான பிரேரணைக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். அப்போது ராஜபக்ஷக்கள் எங்கிருந்தனர் என தேடிப்பாருங்கள். அன்று ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நாம் வெற்றி பெற்றோம். இன்று ராஜபக்ஷ கெபினட் அணியிலேயே ரணிலுக்கு ஆதரவு உள்ளது.

கேள்வி; நம்பிக்கையில்லா பிரேரணையில் மகிந்த தோற்று விட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் பாராளுமன்றத்தில் இது சிக்கலுக்குரிய விடயம் தானே?

பதில்; இதற்கான பதில் சபாநாயகரிடமே உள்ளது. சபாநாயகர்
நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியுள்ளதாகவும் தற்போது அரசாங்கம் இல்லை எனவும் உறுதியாகக் கூறியுள்ளார்.

கேள்வி; பாராளுமன்றத்திற்கு இரு பக்கம் இருக்க வேண்டும். ஆனால் இப்போது ஒரு பக்கமே உள்ளது. அதனால் இப்பாராளுமன்றம் செல்லுபடியாகுமா?

பதில்; கண்டிப்பாக செல்லுபடியாகும். பாராளுமன்றம் எடுக்கும் எல்லாத் தீர்மானமும் செல்லுபடியாகும். நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறியதே இதற்கு சாட்சியாகும்.

கேள்வி; எதிர்கட்சி கூறுகிறது அரசாங்கம் இல்லை என. அரசாங்கம் கூறுகிறது இருக்கிறது என. இப்படியான ஒரு நாடு முன்னேற முடியுமா?

பதில்; முன்னேற முடியாது. இதற்கு ஜனாதிபதி தான்தோன்றித்தனமான எண்ணத்தைக் கைவிட்டு நாட்டுக்காக செயற்பட வேண்டும். நாம் இப்பிரச்சினையை சுமுகமாக பாராளுமன்றத்தில் தீர்க்கப்பார்க்கிறோம். எம்மை விளிம்பிற்குத் தள்ளினால் வீதியில் இப்பிரச்சினையைத் தீர்க்கத் தயாராக உள்ளோம்.

கேள்வி; மகிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருகிறீர்கள். ரணிலுக்கு ஆதரவு அளிக்கமாட்டீர்கள் என்றால் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

பதில்; ரணில் மகிந்த இருவரும் நாட்டை அழித்ததே போதும். நாம் இங்கு அரசியலமைப்பையே காப்பாற்ற பார்க்கிறோம். எமது தனிப்பட்ட கதாப்பாத்திரத்தை அல்ல. எமது நாட்டில் அரசாங்கம் வாக்குகளினால் தான் உருவாகிறது. அப்படியிருக்கும் போது இருவர் இணைந்து ஆட்சியை உருவாக்குகின்றனர் கலைக்கின்றனர். அப்போது இது சதிதானே. அடுத்த பொது தேர்தலின் பின் ஜனாதிபதி நான் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட மாட்டேன் என்றால் என்ன செய்வது.

கேள்வி; அப்போது நீங்கள் ஜனாதிபதிக்கு எதிராக சவாலிடப் போகிறீர்களா?

பதில்; அதைப்பற்றி பின்பு பார்ப்போம். இப்போது யோசிக்க அவசியமில்லை.