மக்களின் ஜனநாயகம் குறித்து எவரும் பேசவில்லை – அருட்தந்தை சக்திவேல்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலையில் அனைவரும் பாராளுமன்றத்தின் ஜனநாயகம் தொடர்பில் பேசுகின்றார்களே தவிர, மக்களின் ஜனநாயகம் குறித்து எவரும் பேசவில்லை என அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தின் ஊடாக இதுவரை காலமும் தமிழ் மக்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டதில்லை. தற்போதைய அரசியல் குழப்பநிலையினால் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளாகிய அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், காணி உரிமை பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு போன்றவையே தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளாகும்.

இவற்றுக்கான தீர்வின் மூலமே மக்களுக்கான ஜனநாயகம் அடைந்துகொள்ள முடியும்.

அண்மைக்காலமாக தொடரும் அரசியல் குழப்பநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளினதும் பேசுபொருளாக அரசியல்கைதிகள் விவகாரம் மாறியுள்ள நிலையில், இவ்விடயம் குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட்ட பிரதான பிரச்சினைகளை வலியுறுத்தி சர்வதேச மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு கோட்டைப் புகையிரத நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.