சர்கார் படத்துக்காக அரிவாளுடன் மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது

அண்மையில் தீபாவளி முன்னிட்டு வெளியான படம் சர்கார். விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய படம் இது. அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அரசு வழங்கிய இலவச மிக்ஸி, கிரைண்டரை உடைப்பது தூக்கி எறிந்து போலவும் தீயில் எரித்துப் பொசுக்குவது போலவும் காட்சிகள் இருந்தன. இதற்கு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

படத்தைப் பார்த்த மயக்கத்தில் விஜய் ரசிகர்கள் பலர் தங்கள் வீட்டில் இருந்த அரசு வழங்கிய இலவச பொருட்களை நாசம் செய்து வீடியோ பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பெருமைப்பட்டுக்கொண்டனர்.

அந்தச் சூழலில் விஜய் ரசிகர்கள் இரண்டு பேர் மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், அவர்கள் அரிவாளும் கையுமாக சர்கார் படக் காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர்களை கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி மிரட்டினர்.

இந்த வீடியோவைப் பகிர்ந்தவர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட வீடியோவை வெளியிட்ட விஜய் ரசிகர்களை அடையாளம் கண்ட போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

வீடியோவில் அரிவாளுடன் பேசிய இருவரும் சென்னையைச் சேர்ந்த லிங்கதுரை, மற்றும் சஞ்சய் என்றும் வீடியோவை பதிவிட்டவர் அனிஷேக் என்றும் தெரிந்தது. இதனையடுத்து சஞ்சய் மற்றும் அனிஷேக் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.