இயக்குநராக அவதாரம் எடுக்கிறாரா நயன்தாரா?

தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகையாக நயன்தாரா இருக்கிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ”தளபதி 63” படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான “விஸ்வாசம்” படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. விஸ்வாசம் படத்தின் ஸ்டில் போட்டோகிராபராக இருந்தவர் சித்ரராசு.

இவர் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் அஜித் நடித்த அனைத்து படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் அஜித் உடனான இனிமையான நினைவுகளை சினிமா இணையதளம் ஒன்றிற்கு பகிர்ந்துள்ளார். அதில் ஒன்று நயன்தாரா இயக்குநர் அவதாரம் எடுத்தது.

இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதனை விளக்கினார். ”ஆரம்பம்” படத்தில் உதவி இயக்குநராக நயன்தாரா பணியாற்றியுள்ளார். ஆனால் அதிகாரப்பூர்வமாக இல்லை.

ஒருநாள் படப்பிடிப்பிற்கு வரும் போது, சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவரது தகவல்கள் மிகவும் உதவிகரமாக இருந்தன. அடுத்த ஒரு வாரம் எந்தவித வேலைகளின்றி நயன்தாரா இருந்தார்.

அப்போது விஷ்ணுவிடம் தான் உதவி இயக்குநராக இருக்கட்டுமா? என்று கேட்டார். இப்படித் தான் அவர் உதவி இயக்குநர் அவதாரம் எடுத்தார். யாருக்குத் தெரியும். ஒருநாள் நயன்தாரா இயக்குநர் அவதாரம் கூட எடுக்கலாம் என்று சித்ரராசு கூறினார்.