மட்டக்களப்பில் பலியான பொலிஸார்: யாழில் துக்கம் அனுஷ்டிக்க கட்டாயப்படுத்தும் புலனாய்வாளர்கள்

மட்டக்களப்பில் அண்மையில் இரு பொலிஸார் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தத்தமது முச்சக்கர வண்டிகளில் கறுப்புக் கொடிகள் கட்ட வேண்டுமென யாழ். வலிகாமத்திலுள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இன்றைய தினம்(05) புலனாய்வுத் துறையினரால் கட்டாயப்படுத்தப்பட்டு

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு வவுணதீவு சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இனம் தெரியாதவர்களால் ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் இன்று அதிகாலை-04.30 மணியளவில் தெல்லிப்பழை முச்சக்கர வண்டித் தரிப்பிடத்திற்குச் சென்ற இரு இராணுவப் புலனாய்வாளர்கள் பல எண்ணிக்கையான கறுப்புக் கொடிகளை வழங்கி அவற்றை முச்சக்கர வண்டிகளின் முன்பாக பறக்க விடுமாறு தெரிவித்துள்ளனர். ஆனால்,தாம் குறித்த கொடிகளைத் தந்த விடயம் யாருக்கும் தெரியவரக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சுன்னாகம் முச்சக்கர வண்டித் தரிப்பிட நிலையத்திற்குச் சென்ற அவர்கள் சுமார் நூறு கறுப்புக் கொடிகளை வழங்கி விட்டு அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் பறக்க விடுமாறு தெரிவித்து விட்டுச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் மருதனார்மடம் முச்சக்கர வண்டித் தரிப்பிட நிலையத்திற்குச் சென்ற இராணுவப் புலனாய்வாளர்கள் சுமார்-20 கறுப்புக் கொடிகளை வழங்கியபின் அனைத்துக் கொடிகளையும் முச்சக்கர வண்டிகளின் முன்பாகப் பறக்க விடுமாறும். அவ்வாறு பறக்க விட்ட பின்னர் அதுதொடர்பான புகைப்படத்தை எடுத்து அனுப்ப வேண்டுமெனவும் கூறிச் சென்றுள்ளனர். புகைப்படமெடுத்து அனுப்புவதற்காக தொலைபேசி இலக்கமொன்றையும் வழங்கி விட்டுச் சென்றுள்ளனர்.

மருதனார்மடம் முச்சக்கர வண்டித் தரிப்பிட நிலையத்தைச் சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டுமென இராணுவ புலனாய்வுத் துறையினரால் வற்புறுத்தப்பட்ட காரணத்தால் அச்சம் காரணமாக அனைத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் தமது முச்சக்கர வண்டிகளில் கறுப்புக் கொடிகளை பறக்க விட்டுள்ளனர்.

எனினும், சுன்னாகம் முச்சக்கர வண்டித் தரிப்பிட நிலையத்தைச் சேர்ந்த இரண்டு முச்சக்கர வண்டிச் சாரதிகள் மாத்திரம் அச்சம் காரணமாகத் தமது முச்சக்கர வண்டிகளில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டுள்ள போதிலும் ஏனைய சாரதிகள் கறுப்புக் கொடிகள் பறக்க விடுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கறுப்புக் கொடிகள் பறக்க விடுமாறு எம்மை யாரும் கட்டாயப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ள அவர்கள் எமது சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது எனவும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

தெல்லிப்பழை முச்சக்கர வண்டித் தரிப்பிட நிலைய முச்சக்கர வண்டிச் சாரதிகளும் கறுப்புக் கொடி பறக்க விடும் செயற்பாட்டிற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.