வங்கியில் வேலை பெற்றுத்தருவதாகக்கூறி இளைஞர் யுவதிகளிடம் பேரம்பேசும் கும்பல்

வவுனியாவிலுள்ள பல தனியார் நிறுவனங்கள், நிலையங்களில்  வியாபார சந்தையூடாகவும் ஏனைய முறைகளிலும் சேகரிக்கப்பட்ட தொழில் விண்ணப்பங்களை தமக்குத்தருமாறும் தனியார் வங்கி ஒன்றில் வேலை வாய்ப்புக்கள் பெற்றுத்தருவதாகவும் தொலைபேசியூடாக தொடர்புகொள்ளும் மர்ம நபர் ஒருவர் தங்களுடன் வேலை தேடுபவர்களை தொடர்புகொள்ளுமாறு கோரிவருகின்றார்.

இவ்விடயம் குறித்து குறிப்பிட்ட வங்கியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது போது அவ்வாறான செயற்பாடுகள் எவையும் குறித்த தனியார் வங்கியினால் இடம்பெறவில்லை இளைஞர்கள், யுவதிகள் இதுகுறித்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலுள்ள சில தனியார் நிலையங்கள் நிறுவனங்களுக்கு தொலைபேசியூடாக அழைப்பினை ஏற்படுத்தி அவர்களிடமுள்ள தொழில் விண்ணப்பங்களை தமக்குத்தருமாறும் அவற்றில் தகுதியுள்ளவர்களுக்கு தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்றுத்தருவதாக தொலைபேசியில் தெரிவித்து வருகின்றார்கள்.

குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டபோது க. பொ.த உயர் தரத்தில் இரண்டு பாடங்கள் சித்தி பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் சரளமாக பேசக்கூடியவதாகவும், கணனி அறிவு கட்டாயம் இருத்தல் அவசியம் என்பதுடன் வேலை பெறும் இளைஞர் ,யுவதிகள் தொடர்புகொண்டால் மேலதிக தகவல்களை வழங்குவதாக நபர் ஒருவர் தெரிவித்து வருகின்றார். அவரை யார் என்று கேட்டதும் தொலைபேசியை துன்டிப்புச் செய்துள்ளார்.

இதையடுத்து பெயர் குறிப்பிட்ட வங்கியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது இவ்வாறான ஒரு செயற்பாடு தங்களது வங்கியினால் மேற்கொள்ளப்படவில்லை. சிலரின் ஏமாற்று நடவடிக்கையில் குறிப்பாக யுவதிகள் சிக்கிக்கொள்ளவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.