மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

எவ்வித இடையூறுகளுமின்றி  மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

சகல அமைச்சுக்களின் செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி தலைமையில் இன்று  (04-12-2018) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியினால் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பிற்கு அமைவாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையினர் தமது கடமைகளை நிறைவேற்றுவதனை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018.12.03 ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு விடுக்கப்பட்டுள்ளமையினால் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கமைவாக பொதுச்சேவைகளை எந்தவித தடைகளுமின்றி தொடர்ச்சியாக நிறைவேற்றுவதற்கு தேவையான ஆலோசனைகளும் கட்டளைகளும் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச பாதுகாப்பினைப் போன்றே நாட்டுக்கும் பொதுமக்களுக்குமான தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் குறைவின்றி நிறைவேற்றுமாறு அனைத்து அரச சேவையாளர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஜனாதிபதியினால் பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.