துப்பாக்கியுடன் இரு இளைஞர்கள் கைது

காலி மற்றும் மொரன்துடுவ பகுதியில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டுவந்த இருவர் நேற்று  பகல் அம்பலன்கொட பகுதியில் கைத்துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

வதுகெதர அம்பலன்கொட பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அம்பலன்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதுகெதர பகுதியில் வைத்து நேற்று  மதியம் 12 மணியளவில் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமைய குறித்த இருவரும் சுற்றிவளைக்கப்பட்டனர்.

இதன்போது, குறித்த இருவரிடமிருந்தும் உள்நாட்டு உற்பத்தியான துப்பாக்கிகள் 3, வெவ்வேறு வகை ரவைகள் 5, காரென்று, மோட்டார் சைக்கிளொன்று, வேன்னொன்று மற்றும் தொலைப்பேசி மீள்நிரப்புகை அட்டைகள் 41  பொலிஸாரால் மீட்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த இருவரையும் கைதுசெய்துள்ள களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக மொரன்துடுவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் மொரன்துடுவ பொலிஸார் அவர்களை இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் நீதவான் அவர்களை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டுள்ளார்.