எல்லைப்புற கிராமங்களை மீட்க அணி திரளவேண்டும் – சத்தியலிங்கம்

வவுனியா மாவட்டத்தின் வடக்கு எல்லைப் பகுதிகள் அதனையொட்டியிருக்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களுக்கும் சொந்தக்காரர்களாக இருக்கின்ற தமிழ் மக்கள், தொடர்ந்தும் அங்கு வாழக்கூடிய சூழ்நிலை இருக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

 

இன்று எமது எல்லைப்புற கிராமங்கள் கபளிகரம் செய்யப்படுகின்ற நிலை இருக்கின்றது.

எனவே எல்லைப்புறக் கிராமங்களை மீட்க அனைவரும் அணி திரளவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று முல்லைத்தீவு – ஒதியமலையில் இடம்பெற்ற , தமிழர்கள் 32பேருடைய படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்குமபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்களுடைய வவுனியா மாவட்டத்தின் வடக்கு எல்லையாக இருக்கின்ற நெடுங்கேணி பிரதேசசெயலாளர் பிரிவு மற்றும் அதனையொட்டியிருக்கின்ற முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்கள் என்பன கபளீகரம் செய்யப்படுகின்றன. அந்தப் பகுதிகளுக்குச் சொந்தக் காரர்களாக இருக்கின்ற தமிழ் மக்கள் தொடர்ந்தும் அந்தப்பகுதியில் வாழக்கூடிய சூழ்நிலை இருக்கின்றதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகும்.

இன்று தமிழ் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு புதிய சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன. எங்களுடைய தமிழ் கிராமக்கள் காணாமல் போகின்ற நிலை காணப்படுகின்றது.

எனவேதான் இந்த எல்லைப்புறக் கிராமங்களில் நாங்கள் எங்களுடைய இருப்பை நிலை நிறுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஆகவே எல்லைப்புறக் கிராமங்களில் வாழ்கின்ற அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தக் கிராமங்களில் தொடர்ந்தும் எங்களுடைய இருப்பை தக்கவைக்கக்கூடிய வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்றார்.