ரணில், கூட்டமைப்புடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு: அரசியலில் திருப்பம் ஏற்படுமா?

தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் வகையில் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம்(30) முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

இன்று பிற்பகல் குறித்த சந்திப்புக்கள் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல்-06 மணியளவில் பேச்சு நடாத்தவுள்ளார்.

இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், றிசாத் பதியுதீன் உள்ளிட்டோருடன் பிற்பகல்-07 மணிக்கும் பேச்சு நடாத்தவுள்ளார்.

இதேவேளை, தற்போதைய அரசியல் நெருக்கடிகளைத் தீர்க்கும் புதிய முயற்சிகளில் இந்தச் சந்திப்புகள் முக்கியமான திருப்பமாக அமையலாமென எதிர்பார்க்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.