மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டம் ஜனாதிபதி தலைமையில் திறந்து வைப்பு

மகாவலி திட்டத்தின் இறுதி அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டன.

நான்கு தசாப்தங்களின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட மிக பிரம்மாண்ட பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமான மொரகஹகந்த, களுகங்கை நீர்த்தேக்க திட்டம் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளின் விசேட மைல் கல்லாகும்.

கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இந்த நீர்த்தேக்கத்திற்குள் நீர் நிரப்பப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு பராக்கிரம சமுத்திரத்தை விட நான்கு மடங்கு அதிகம்.

இதன் ஊடாக 82,000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இந்த திட்டத்தின் கீழ் வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக சுமார் 2000 சிறிய மற்றும் பெரிய குளங்களுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தினூடாக வடமத்திய மாகாணத்தின் 1600 குளங்களுக்கும் வடமேல் மாகாணத்தின் 303 குளங்களுக்கும் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

இதேவேளை, களுகங்கை நீர்த்தேக்கத்தின் பயனை விரைவாக மக்களுக்கு வழங்குமாறு திட்ட அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.