ஒரே ஒரு கைதியுடன் நடுக்கடலில் திகில் சிறை

தவறு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டும் இந்தியாவில் தண்டனை என்றால் என்ன என்றால் ஒருவரை சிறைக்கு தள்ளுவது தான். இந்த முறை தண்டனையை தான் ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் இருந்தே நாம் பின்பற்றி வருகிறோம்.

இப்படியாக ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் நமது நாட்டில் தவறு செய்பவர்களையும் விடுதலைக்காக போராடியவர்களையும் ஆங்கிலேயர்கள் சிறையில் அடைத்தனர். சிறை என்றால் இன்று இருக்கும் அளவிற்கு அதில் வசதிகள் எல்லாம் இல்லை.

நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத கொடூரங்கள் எல்லாம் அன்று நடந்தது. அந்த கொடூரங்களை தாங்க முடியாத பலர் சிறையில் தப்பிக்க முயற்சி செய்வார்கள் இப்படியாக சிறையில் இருந்து யாரும் தப்பி விட கூடாது என்பதற்காக நடுக்கடலில் சிறைகளை கட்டினர்.

தற்போது உள்ள குஜராத் மாநிலத்திற்கு அருகே உள்ளது டையூ, இது தற்போது யூனியன் பிரதேசமாக உள்ளது. இந்த பகுதி ஒரு காலத்தில் போர்த்துகீஷிய கட்டுப்பாட்டில் இருந்தது. அப்பொழுது போர்த்துகீஷியர்கள் நடுக்கடலில் சுமார் 472 ஆண்டுகளுக்கு கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை கைதிகளை அடைக்கும் சிறையாக பயன்படுத்தினர்.

இந்த சிறை இன்றும் செயல்பாட்டில் உள்ளது. தற்போது யூனியன் பிரதேச கட்டுப்பாட்டில் உள்ள இந்த சிறை முழுவதும் பழங்கால கற்கள் கொண்டு கட்டப்பட்டது. இந்த சிறையில் இருந்து எந்த கைதியும் அவ்வளவு எளிதாக யாரும் தப்பிக்க முடியாது சிறை சுற்றிலும் கடல் இருக்கிறது.

இந்த சிறையை மூட கடந்த 2013ம் ஆண்டே உத்தரவிடப்பட்டது. ஆனால் அதில் உள்ள சிறை கைதிகள் விடுதலையாகியோ அல்லது தண்டனை உறுதியாகி வேறு சிறைக்கு சென்று மொத்தமாக சிறை காலியானதும் அது மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

2017ம் ஆண்டு சிறையை மூட உத்தரவு வந்த போது இந்த சிறையில் மொத்தம் 2 பெண்கள் உட்பட 7 பேர் கைதிகளாக இருந்தனர்.

அதில் 4 பேருக்கு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு அவர்கள் குஜராத் மாநிலம் அமரேலி சிறைக்கு மாற்றப்பட்டனர். 2 பேர் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி சென்றனர். தற்போது அந்த சிறையில் ஒரே ஒரு கைதி மட்டும் இருக்கிறார். அவரது பெயர் தீபக் காஞ்சி

30 வயதான தீபக் காஞ்சி தனது மனைவியையே கொலை செய்த வழக்கில் தற்போது இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது கோர்ட்டில் விசாரைனையில் உள்ளது. இந்த வழக்கில் இவருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டால் அவர் குஜராத்தில் உள்ள சிறைக்கு மாற்றப்படுவார்.

இந்த சிறை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது இந்த சிறையில் உள்ள கைதிகளுக்காக அரசு மாதம் ரூ 32 ஆயிரம் வரை செலவு செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டது. இது இந்தியாவில் சராசரியாக கைதிகளுக்கு அரசு செய்யும் செலவை விட பல மடங்கு அதிகம் ஆகும்.

தற்போது சிறையில் ஒரு கைதி மட்டும் இருக்கும் நிலையில் அந்த சிறை நடத்த அரசு செலவு செய்யும் அத்தனை செலவும் அவர் ஒருவருக்கு செய்யும் செலவு தான்.

தற்போது தீபக் ஒருவர் தான் அங்கு கைதியாக இருப்பதால் அவருக்கான உணவு அந்த சிறையில் இருந்து கடல் கடந்து வந்ததும் கரையில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து அவருக்கான உணவு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறையில் சுமார் 5 காவலர்கள் ஒரு ஜெயிலர் தற்போது பணியில் உள்ளனர். அவர்கள் ஸிப்ட் முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பணிபுரியும் காவலர்கள் அந்த சிறையில் பொழுதை கழிப்பது என்பது நரக வேதனையான விஷயம் என்றும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழிக்க வேண்டியது இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

அந்த சிறையில் கைதியாக உள்ள தீபக்கிற்கு தூர்தர்ஷன் டிவியை சிறிது நேரம் பார்க்கவும் , குஜராத்தி செய்திதாள், வார புத்தகங்கள் படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிறையில் நடை பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நடுக்கடலில் உள்ள ஒரு இடத்திற்கு நாம் சுற்றுலாவாக சென்று வர விருப்பபடுவோம். ஆனால் அந்த பகுதியில் சிறை கைதியாக அதுவும் பல ஆண்டு காலம் தனிமையில் இருக்க வேண்டும் என்றால் நிச்சயம் மிக கொடுமையானது மட்டும் அல்ல திகிலான விஷயம் தான்.