இம்முறை க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு 13 கைதிகள் தோற்றவுள்ளனர்

இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 13 கைதிகள் தோற்றவுள்ளனர்.

இவர்களில் 12 பேர் வெலிக்கடை மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைகளில் அமைக்கப்படவுள்ள மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

மற்றுமொரு கைதி வட்டரெக்க சிறைச்சாலையில் அமைக்கப்படவுள்ள பரீட்சை நிலையத்தில் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.

இதேவேளை, மாத்தறை, காலி மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளில் 560-க்கும் மேற்பட்ட விசேட தேவையுடைய மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மாணவர் ஒருவரும் டெங்கு காய்ச்சலால் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் ஒருவரும் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

குறித்த மாணவர்களுக்காக, அந்தந்த பகுதிகளிலேயே பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் 25 ஆம் திகதி பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வௌியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறியுள்ளார்.

அன்றைய தினம், விடுமுறை தினம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

6, 56, 641 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சையில் தோற்றவுள்ளனர்.