வசீம் தாஜூதீன் கொலை: உண்மையான சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு

ரக்பி வீரரான வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய உண்மையான சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுரு நெத்திகுமாரகே குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

வசீம் தாஜூதீன் வாகன விபத்தால் உயிரிழக்கவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தினால் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக மேலதிக நீதவான் தெரிவித்தார்.

குறித்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுமித் தம்மிக்க பெரேரா மற்றும் கொழும்பு முன்னாள் தலைமை சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் இசுரு நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

குறித்த கொலை தொடர்பான தகவல்களை மறைத்தமை மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக நீதவான் மன்றில் தெரிவித்தார்.

குறித்த கொலையுடன் தொடர்புடைய உண்மையான சந்தேகநபர்கள் யார் என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் கேட்டறிந்துகொண்ட மேலதிக நீதவான், அவர்களைக் கைது செய்து மன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

2012 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்தக் கொலை தொடர்பில் இதுவரை 1200 ​பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொக்குஹெட்டிகே தெரிவித்தார்.

22 இலட்சத்திற்கும் அதிக தொலைபேசி உரையாடல்கள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மன்றில் குறிப்பிட்டார்.