பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு சி.வி. விக்னேஷ்வரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை

பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு நேற்று (28) மாலை அனுப்பியுள்ள கடிதத்தில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தம் மீதான உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் தெரிவித்துள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றிருந்த போது தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கு இதனை தெரிவித்ததாகவும், இதில் சந்தேகத்திற்குரியவராகக் காணப்பட்டவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா எனவும் சி.வி. விக்னேஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னுடைய வாசஸ்தலத்திற்குரிய பாதுகாப்பு நீக்கப்பட்ட போதிலும், தன்னுடைய பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டு வந்ததாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், நேற்று (28) காலை தன்னுடைய பாதுகாப்பு உத்தியோத்தர்களை உடனடியாக யாழ். பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திடுமாறு அறிவிக்கப்பட்டதாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடித்தத்தில் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் யாழ். பொலிஸ் நிலையம் சென்று கையெழுத்திட்டுள்ளனர்.

எனவே, பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கையிடப்பட்ட தன்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து தனக்கான தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.