பெப்ரவரிக்கு முன்னர் பாடசாலை சீருடை பெற்றுக்கொடுக்கப்படும்: கல்வி அமைச்சு

அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்குமான பாடசாலை சீருடை பெற்றுக்கொடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வவுச்சர் வழங்கும் திட்டத்திற்கு பதிலாக மீண்டும் சீருடைக்கான துணியை வழங்க கடந்த 22 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பாடசாலை சீருடையைப் பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சீருடைக்கான வவுச்சர்களை விநியோகித்த போது 550 மில்லியன் ரூபா மேலதிக செலவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் ஆடை தயாரிப்பாளர்களிடம் சீருடைக்கான துணியை கொள்வனவு செய்யாமையால் அவர்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியதாகவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.

இதன் காரணமாக 1000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதியை வௌிநாட்டவருக்கு வழங்க வேண்டி நேரிட்டதாகவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.