இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்

முதலாவதாக, பாராளுமன்றம் என்றால் என்ன என்பதை யாவரும் அறிந்திருக்க வேண்டும். பிரஞ்சு மொழியில் பார்ல் (parler) பேசு, கதை, போன்ற அர்த்தமுள்ள சொல்லிருந்து (parliement) பாராளுமன்றம் என்ற சொல், 11 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸில் உருவானது இதனை தொடர்ந்து ஆங்கில றோமன் பிரெஞ்சு காலப்பகுதியான 14ம் நூற்றாண்டில், (parliament) பாராளுமன்றம் என்ற சொல் ஆங்கிலத்தில் பிரித்தானியாவில் பாவனைக்கு வந்துள்ளது.

இவ்வேளையில் பாராளுமன்றத்தின் நடப்புக்களை கடமைகளை நாம் உலகளாவிய ரீதியில் ஆராய்வோமானால் பாரளுமன்றத்திற்குத் தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் அவர்களது நாட்டு மக்களின் பாதுகாப்பு பொதுநலன்களை மனதிற் கொண்டு, விவாதங்கள் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் சட்டங்களை வகுப்பதுடன், ஆண்டு தோறும் நாட்டிற்குரிய வரவு செலவுவிற்கான பட்ஜெட்டைத் தயாரித்து, அரசாங்கத்தின் நாளாந்த நடைமுறைகளை கண்காணிப்பார்கள்.

உலகில் சில நாடுகளில், ஜனநாயகம் நடைமுறையிலிருந்ததோ இல்லையோ, பாராளுமன்ற முடிவுகளை ஜனநாயக ரீதியாகப் பெற்றுக் கொண்டதாகக் காண்பிப்பது வழமை. இதற்கு நல்ல உதாரணமாக இலங்கைத் தீவின் சிறிலங்கா விளங்குகிறது.

இவ் அடிப்படையில், 1948 ஆம் ஆண்டு இலங்கைத் தீவின் சுதந்திரத்தை தொடர்ந்து இப் பாராளுமன்றத்தில் நடந்த நடைபெற்ற தீர்மானிக்கப்பட்ட சில சம்பவங்களை நாம் கவனத்திற் கொள்வது அவசியம்.

கடந்த சில தினங்களாக உலகத்தின் கவனம் சிறிலங்கா பாராளுமன்றம் பக்கம் திரும்பியுள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது. அங்கு நடப்பவற்றிற்கும், பாராளுமன்றத்தின் வரவிலக்கணத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அங்கு கடந்த சில தினங்களாக நடப்பவற்றை சிலர் ஓர் மல்யுத்த களத்திற்கு ஒப்பிடுகின்றனர்.

சிறிலங்காவின் சரித்திரத்தை நன்கு அறிந்த ஒருவருக்கு அங்கு நடப்பவை எதுவும் ஆச்சரியத்தையோ அதிசயத்தையோ உண்டு பண்ண முடியாது. இதற்கு காரணங்கள் பல:

இப் பாராளுமன்றத்திற்குள்ளும், இதன் மண்டப வாசல்களிலும் நடந்த சில அசம்பாவிதங்களையும், அத்துடன் இலங்கைதீவில் வாழும் தமிழ் மக்களிற்கு எதிராக இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்களையும், பௌத்த சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களிற்குச் சார்பாக செய்ய மறுத்த சில தீர்மானங்களையும் இங்கு சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேன். இவற்றை இந்தியா உட்பட சார்வதேச சமுதாயம் கவனத்திற் கொள்ளுமென நம்புகிறேன்.

கோவணத்துடன் முன்னாள் பிரதமர்

1956 ஆம் ஆண்டு யூன் 14 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவின் தகப்பனர், பிரதமர் எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவினால், சிங்களம் மட்டுமே உத்தியோக மொழியென்ற தீர்மானத்தைக் கொண்டு வந்த வேளையில், அன்றைய தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள், ஓர் சாத்வீக போராட்டத்தை முன்னைய பாரளுமன்ற கட்டிடத்திற்கு முன்பாக, அதாவது கொழும்பில் காலிமுகத் திடலில் நடாத்திய வேளையில், அவர்களை சிங்கள காடையர்கள் சிங்கள பௌத்தவாத அரசாங்கத்தின் ஏவுதலில் மிகவும் மோசமான முறையில் தாக்கினார்கள். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற தமிழர்கள் மீதான இனக் கலவரத்தில், 150 இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டும், பல கோடி ரூபா பெறுமதியான அவர்களது சொத்துக்களும் சூறையாடப்பட்டன.

1964 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவின் தாயார் பிரதமர் திருமதி பண்டாரநாயக்காவினால் ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு இரு யார் துணி மட்டுமே பெற்றுக் கொள்ள முடியுமென பாராளுமன்றத்தில் தீர்மானித்த வேளையில், இந் நடைமுறையை எதிர்ப்பதற்காக, முன்னாள் பிரதமரும் பாரளுமன்ற உறுப்பினருமான விஜயாநந்த தகநாயக்க அவர்கள், கோவணத்துடன் பாராளுமன்றத்திற்குள் நுழைய முற்பட்ட வேளையில், இவர் பொலிஸாரினால் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தப்பட்டார். சிறிலங்காவின் பாராளுமன்றத்தில், இன்று வரை பலவிதப்பட்ட கை கலப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி, மலைநாட்டில் வாழும் இந்திய வம்சாவழியினரிது வாக்குரிமை, பிராஜவுரிமை யாவும் பறிக்கப்பட்டது. இதனால் கோடிக்கணக்கான மலைநாட்டு தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர்.

மீறப்பட்ட உடன்படிக்கைகள்

1957ஆம் ஆண்டு யூலை மாதம் 26 ஆம் திகதி, அன்றைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவிற்கும் தமிழர்களின் தலைவரான தந்தை எஸ். ஜே.வி.செல்வநாயகத்திற்கும் இடையில், தமிழர்களது தாயாகபூமியான வடக்கு கிழக்கிற்கு “சமஸ்டி’அடிப்படையில் அரசியல் தீர்வு வழங்குவதற்காக ஓர் உடன்படிக்கை கைச்சாத்தாகியது. ஆனால் இவ் உடன்படிக்கை, சிங்கள பௌத்தவாதிகளின் எதிர்ப்புக் காரணமாக ஒரு வாரத்திற்குள் ஏதேச்சையாகக் கிழித்து ஏறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழர்கள் மீதான இனக் கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், பல கோடி ருபா பெறுமதியான அவர்களது சொத்துக்களும் சூறையாடப்பட்டன.

1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வாக்குரிமை பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட இந்திய வம்சாவழியினரை, இந்தியாவிற்கு நாடு கடந்துவதற்காக, 1964 ஆம் ஆண்டு இந்தியாவுடனான சிறிமாவோசாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, 115 ஆண்டுகள் இலங்கைத்தீவில் வாழ்ந்த மலைநாட்டுத் தமிழர்கள் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர்.

1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி, அன்றைய பிரதமர் டட்ளி சேனநாயக்காவிற்கும் தமிழர்களின் தலைவரான தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கும் இடையில் தமிழர்களின் அரசியல் தீர்விற்கான ஓர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஆனால் சிங்கள பௌத்தவாதிகளின் எதிர்ப்புக் காரணமாக இவ் உடன்படிக்கை உடனேயே கிழித்து ஏறியப்பட்டது.

குடியரசிற்கான அரசியல் யாப்பு

1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி, இலங்கை ஓர் சிறிலங்கா குடியரசாக மாற்றம் பெற்றது. இவ்வேளையில் குடியரசின் யாப்பிற்கு அமைய, பௌத்த மதம் சிறிலங்காவின் முதன்மை மதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதுடன், வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு முன்னைய அரசியல் யாப்பிலிருந்த பாதுகாப்பு சாரங்கள் குடியரசு யாப்பு மூலம் நீக்கப்பட்டது.

1972 ஆம் ஆண்டு தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியாதவாறு கல்வி தரப்படுத்தல் அறிமுகம் செய்யப்பட்டது.

1979 ஆம் ஆண்டு, ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனாவினால் தமிழ்ப் போராளி அமைப்புக்களை தடை செய்யும் நோக்குடன் பயங்கரவாதச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வடக்கு கிழக்கு பகுதிகள் யாவும் அரச பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழர்கள் மீது நடைபெற்ற இனக் கலவரத்தினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், பல கோடி ருபா பெறுமதியான அவர்களது சொத்துக்களும் சூறையாடப்பட்டன.

இவற்றைத் தொடர்ந்து, சிங்களக் கடையர்களும் அரச படைகளும் இணைந்து, தென் ஆசியாவின் முக்கிய நூலகமாக விளங்கிய யாழ் நூலகம் உட்பட யாழ்ப்பாணத்தின் நவீன சந்தை, பத்திரிகைக் காரியலாயம், அரசியல் கட்சியின் காரியலயம் போன்றவை தீக்கிரையாக்கினார்கள்.

1983 ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழர்கள் மீதான இனக் கலவரத்தினால் 6000 இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டும், பல கோடி ருபா பெறுமதியான சொத்துக்கள் சூறையாடப்பட்டதுடன், 250,000 மேற்பட்ட தமிழர்கள் அகதியாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்தியா உட்பட மேற்கு நாடுகள் சென்று அரசியல் தஞ்சம் கோரினார்கள்.

53 தமிழ் கைதிகள் படுகொலை

1983ஆம் ஆண்டு யூலை மாதம் 2728 ஆம் திகதிகளில், கொழும்பில் உள்ள அதிபாதுகாப்பு நிறைந்த வெலிக்கடை சிறைசாலையில், 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள கைதிகளினால் அரசின் அனுசரனையுடன் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்த சிங்கள கைதிகளிற்கு, அரசினால் வீடு நிலமென பரிசுகளும் பாராட்டுதல்களும் வழங்கப்பட்டது. அவ்வேளையில் தமிழ்ப் பாரளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்தார்கள்.

தற்பொழுது சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் நடப்பவற்றை உற்றுநோக்குவோமானால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால், 2003 ஆம் ஆண்டு மேற்கொண்ட நடைமுறைகளை, இன்று ஜனாதிபதி சிரிசேனா மேற்கொள்வதைக் காண முடிகிறது.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகியதும், 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஓர் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்தில் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தை காலத்தில், ஓர் இடைகால தீர்வின் அவசியம் காரணமாக, 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகளினால் ஓர் இடைகால தீர்விற்கான வரையறையை அரசிடம் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி சந்திரிக்கா, ரணில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த பாதுகாப்பு, உள்துறை, தகவல் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ததுடன், பாராளுமன்றத்தையும் இரு வாரங்கள் இடைநிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில், 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி, ரணில் அரசாங்கத்தை ஜனதிபதி சந்தரிக்கா, கலைத்து பாராளுமன்றத் தேர்தலுக்கு வழிவகுத்திருந்தார். இவை யாவற்றை சந்திரிக்கா, நாட்டின் பாதுகாப்புக் கருதி நடைமுறைப் படுத்தியதாக கூறத் தவறவில்லை.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதி சந்திரிக்காவின் கட்சி வெற்றி பெற்றிருந்தது. அவ்வேளையில், ஜனதா விமுக்கி பேரமுனையின் (ஜே.வி.பி.) முன்னெடுப்பில், முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும், தமிழருமான லக்ஸ்மன் கதிர்காமரை பிரதமர் ஆக்குமாறு ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு பலராலும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்ட வேளையில், மகிந்த ராஜபக்சா தனது வழமையான இனவாத அடிப்படையில், பௌத்த பீடாதிபதிகளின் துணையுடன், லக்ஸ்மன் கதிர்காமரை ஒதுக்கி வைத்து, தன்னை பிரதமாராக்கி கொண்டார். இவை யாவும் இலங்கைதீவின் சரித்திரங்கள்.

வேடிக்கை என்னவெனில், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பில் ஏற்கனவே கல்விமான்களிற்காகத் திகழ்ந்து வரும் ஓர் நிறுவனத்தை, கதிர்காமரின் நினைவாக அவரது பெயரில் மகிந்த ராஜபச்சாவினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது சர்வதேச சமூதாயத்தை தனது பக்கம் திருப்பும் ராஜபக்சாவின் கபடமான முடிவாகும்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளினது அல்லது தமிழரது வியர்வை, கடும் உழைப்பையும், சிங்கள பௌத்தவாதிகள் தமது சுயநலத்திற்காக எப்படியாகப் பாவிக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் நல்ல ஊதாரணமாகும்.

புதிய ஜனநாயக முன்னணி

இலங்கைத்தீவைப் பொறுத்த வரையில், அங்கு உண்மையான ஜனநாயம் இல்லையென்பதை ஓரு கோடிக்கு மேலான தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளது உறுதி பண்ணுகிறது.
சிறிலங்காவின் அரசியல் யாப்பு என்பது, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, வேறு அரசியல் உரிமைகளை நசுக்குவதற்கானவையே தவிர, தெற்கின் அரசியல்வாதிகளை இவ் யாப்பு கட்டுப்படுத்துவதாகக் காணப்படவில்லை.

ஓன்றும் புரியாத புதிர் என்னவெனில் 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவும், 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிரிசேனவும் தமது ஜனாதிபதி தேர்தல்களில், புதிய ஜனநாயக கட்சியையும் அதன் சின்னமான அன்னத்தில் போட்டியிட்டுள்ளனர். இவ் புதிய ஜனநாயக கட்சி, ஓர் பிரித்தானிய பிரஜையான சகிலா முனசிங்கி என்பவரை நிறுவன அங்கத்தவராகவும், அதன் முன்னேடியாகவும் கொண்டுள்ளது. இச் சகிலா முனசிங்கி வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல சர்ச்சைகளை எதிர்நோக்குபவராகக் காணப்படுகிறார். எமது வினா என்னவெனில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரினால் சிறிலங்காவில் ஓர் அரசியல் கட்சி பதிவு செய்வதை சிறிலங்காவின் அரசியல் யாப்பு ஏற்று கொள்கிறதா? அப்படியானால் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட கீத்தா குமரசிங்காவிற்கு நடந்தது என்ன?

இப்படியான காரணங்களினால் தான் ராஜபக்சாவும், ரணில் விக்கிரமசிங்காவும் ஜனதிபதி சிறிசேனாவை மிரட்டி வருகின்றனர் போலும். புதிய ஜனநாயகக் கட்சி பற்றி ஆய்வுகளை நாம் மேலும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் பேய்க்கும் பிசாஸிற்கும் இடையில் அகப்பட்ட ஆட்டுகுட்டியாகக் காணப்படுகின்றனர்.
உலகில் வேறுபட்ட நாடுகளில் இடம்பெற்ற இன அழிப்பு என்பது பல வருடங்கள் தசாப்தங்கள் கடந்தே அங்கீகரிக்கப்படுகிறது என்பதே உண்மை யாதார்த்தம். அவை ஓர் இன அழிப்பாக ஏற்று கொள்ளப்படும் வேளையில், அவற்றை மேற்கொண்ட குற்றவாழிகள் பெரும்பலோனோர் ஒன்றில் உயிர்வாழ்வதில்லை அல்லது தண்டனையை தாண்டிய தொண்ணூறு, நூறு வயதை அடைந்து விடுவார்கள். இவற்றிற்கு நல்ல ஊதரணமாக துரக்கியில் நடைபெற்ற ஆர்மேனிய மக்களின் இன அழிப்பு, போஸ்னியாவில் நடைபெற்ற செப்ஸரீனியா மக்களின் இன அழிப்பு, ருவாண்டாவில் ருற்சிஸ் மக்களின் இன அழிப்பு, கம்போடியாவில் இடம்பெற்ற கமீஸ் மக்கள் அல்லது வேறு பல இன அழிப்புக்களை குறிப்பிடலாம்.

மியாமாரின் றோகீனிய மக்கள் மீதான இன அழிப்பு, உலகில் ஒர் விதிவிலக்காகக் காணப்படுகிறது. மிகவும் கவலை என்னவெனில், சிறிலங்காவிலிருந்து தனது தொலைநோக்கில் பார்த்து றோகீனிய மக்கள் ஓர் இன அழிப்பிற்கு ஆளாக்கபட்டிருக்கிறார்களே எனக் கூறுபவர், இலங்கைதீவில் தனது முற்றத்தில் நடைபெற்ற தமிழர்களது இன அழிப்பு பற்றி இன்றுவரை அமைதி காப்பது மிகவும் வேடிக்கையானது. அடிமை தனத்தை ஏற்பவர்கள், தமது இனத்தை பற்றி ஒரு பொழுதும் அக்கறை கொள்ளமாட்டார்கள்.

எது என்னவானாலும், நாம் சோர்வற்று தொடர்ச்சியாக சர்வதேச வேலைத் திட்டங்களை மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டும், அவ் வழி மூலம் எமது தமிழினத்திற்கு நடைபெற்றது ஓர் இன அழிப்பு என்பதை நிருபிப்போம். அவ்வேளையில் எமது இனத்தின் மீது இன அழிப்பை மேற்கொண்டவர்கள் உயிருடன் இருப்பார்களா, அல்லது தமது தள்ளாடும் வயதில் தள்ளுவண்டிகளில் நீதி மன்றங்கள் செல்வார்களா என்பதற்கு, காலம் தான் பதில் கூற வேண்டும்.