சாட்டி துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரி போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு

சாட்டி துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரி போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகளின் கொடி, இலட்சினை,மற்றும் புலிகளின் சீருடையுடனான உருவப்படங்களை பயன்படுத்துவதை தடை செய்வதாகவும் பாடல்கள் ஒலிபரப்பவும் இறந்தவர்களை நினைவுகூர அனுமதி வழங்குவதாகவும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் கடந்த ஆண்டு போன்று இம்முறையும் கருணாகரன் குணாளன் என்பவர் உள்ளிட்ட தமிழ்த் தேசிய செயற்பாட்டுக்குழுவினர் ( செண்பகம் அமைப்பு ) தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பினை நினைவு கோர முற்பட்டுள்ளனர். எனவே மேற்படி நிகழ்வினை தடைசெய்யுமாறு கோரி ஊர்காவற்துறை நீதிவான் மன்றில் ஊர்காவாற்துறை தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி விகும் வீரசேகர மனுத்தாக்கல் செய்திருந்தார்

இம்மனு இன்று காலை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற தலைமை நீதிவான் அ. யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புலிகளின் பாடல்கள் ஒலிபரப்புவதனை தடைசெய்யமுடியாதென்றும் புலிகளின் கொடி , இலச்சினை , புலிகளின் சீருடைகளோடு கூடிய உருவப்படங்களை மேற்படி நிகழ்வில் பயன்படுத்துவதற்கு தடைவிதிப்பதாகவும் இறந்தவர்களின் சாதாரண உருவப்படங்களை பயன்படுத்தி அஞ்சலி நிகழ்த்தலாமென்றும் தீர்ப்பு அளித்துள்ளார் . கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நடாத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் புலிகளின் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டதாகவும் இந்நிலையில் அதுகுறித்து பொலிசார் எந்தவிதமான நடவாடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் இறந்தவர்களோடு தொடர்புடையவர்கள் மேற்படி துயிலுமில்லத்தில் மேற்படி பாடல்களை ஒலிபரப்பி உணர்பூர்வமாக அனுஸ்டிப்பதை மாத்திரம் பொலிசார் தடைவிதிக்க கோருவதேனென்றும் நீதிவான் கேள்வி எழுப்பினார்.

இதே வேளை சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் கடந்த வருடம் போன்று இவ்வருடமும் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.