171 பேரை கொன்றவருக்கு 5,160 ஆண்டுகள் சிறை

குவான்தமாலாவில் 171 பேரை கூட்டாக படுகொலை செய்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு 5,160 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டோஸ் எர்ரஸ் என்ற விவசாய கிராமம் ஒன்றில் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் 1982 ஆம் ஆண்டு கூட்டாக படுகொலை செய்வதில் சான்டோஸ் லோபஸ் என்ற அந்த முன்னாள் இராணுவ வீரரும் பங்கேற்றிருந்ததாக குற்றங்காணப்பட்டுள்ளது.

குவான்தமாலாவின் 36 ஆண்டு சிவில் யுத்தத்தில் மோசமான குற்றச்செயல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

குறித்த கிராமத்தில் கெரில்லாக்கள் அல்லது துப்பாக்கிகளை இராணுவம் கண்டுபிடிக்க தவறியதை அடுத்து ஆத்திரமடைந்த இராணுவம் அங்குள்ளவர்களை இழுத்துச் சென்று படுகொலை செய்துள்ளனர். அப்போது பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

குவான்தமாலாவின் முன்னாள் இராணுவ சர்வாதிகாரி உப்ரெயின் ரியோஸ் காலத்திலேயே இந்த படுகொலை இடம்பெற்றது. அவர் மீது இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மரணமடைந்தார்.

1960 தொடக்கம் 1996 வரை நீடித்த குவன்தமாலா சிவில் யுத்தத்தில் 2 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.