பெரும்பான்மை இல்லையெனில் ஆளும் கட்சியிலிருந்து விலகுவதே ஜனநாயகம்! சஜித் பிரேமதாச

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட பின்னர் ஆளும் கட்சியிலிருந்து விலகிக் கொள்வதே ஜனநாயகமாகும்.

எனினும், அரசாங்கம் என சொல்லிக்கொள்ளும் தரப்பினர் ஜனநாயகத்துக்கு விரோதமாக தொடர்ந்தும் ஆளும் தரப்பில் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்ற குழு அறையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜனநாயகத்துக்கு மதிப்பளித்தும் உண்மையை ஏற்றுக் கொள்ளாது பலவந்தமாக தமது அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆளும் கட்சியினராக செயற்பட்டு வருகின்றனர். தெரிவுக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான குழுவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பதவியேற்ற அரசாங்கத்துக்கு சட்டரீதியான உரிமை எதுவும் இல்லை என்பதுடன் அவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். எமது தரப்பில் 121 பெரும்பான்மையைக் கொண்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்பதை உலகத்துக்குக் காண்பிக்க முடிந்துள்ளது. இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் உள்ள குழுக்களுக்கு அவர்களின் சார்பில் பெரும்பான்மையானவர்களை நியமிக்க முடியாது. அதேபோன்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம் குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் யாருக்குப் பெரும்பான்மை உள்ளது என்பது புலனாகியுள்ளது என்றார்.