அரசிலமைப்பை மீறும் வகையில் எவரும் செயற்பட முடியாது

பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெறாத ஒருவர் நாட்டின் பிரதமராகவோ அல்லது அமைச்சரவையின் தலைவராகவோ இருக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் எவரும் செயற்பட முடியாது. இதற்கு மதிப்புக் கொடுத்து நடக்க வேண்டியது சகலரதும் கடமையாகும். பாராளுமன்றத்தின் பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரே பிரதமராக இருக்க முடியும். எனினும், தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கு பெரும்பான்மை இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இலஞ்சம் கொடுப்பதன் மூலமும், வன்முறைகள் மூலமும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வன்முறையான முறையில் நடந்துகொண்டனர். இதனால் நாட்டுக்கும், சட்டவாக்கசபைக்கும் வெட்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது.

அரசியலமைப்பை மதிக்கும் வகையில் செயற்படுவதுடன், பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறைத்து மதிப்பிடப்பட முடியாது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத உறுப்பினர் ஒருவர் பிரதமராகவும், அமைச்சரவையின் தலைவராகவும் நியமிக்கப்பட முடியாது என்பதே தமது நிலைப்பாடு என அவர் மேலும் தெரிவித்தார்.