முல்லைத்தீவில் பேருந்து ஒன்று தீக்கிரை! 18 இலட்சம் ரூபா இழப்பு!

புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியை சேர்ந்த பேருந்து நேற்று முன்தினம் (19) யாழ்ப்பாணம் பயணிகளை ஏற்றிச் சென்று திரும்பி கொண்டுவரப்பட்டு நிலையில், வழமையாக பேருந்து நிறுத்தும் இடத்தில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இரவு 11.30 மணி அளவில் வீட்டில் நாய்கள் கடுமையாக குரைத்த போது, எழுந்து பார்த்த போது கண்ணாடிகள் வெடித்து பறக்கும் சத்தம் கேட்டது உடனடியாக வெளியில் வந்து பார்த்த போது குறித்த பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

உடனடியாக அருகில் இருந்தவர்களது உதவியுடன் முடிந்தவரை தீயை அணைக்க முயற்சித்து அணைத்ததாகவும் இருப்பினும் சுமார் 18 இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பேருந்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதோடு, பேருந்து விசமிகளால் எரியூட்டப்பட்டதா அல்லது மின்னொழுக்கு காரணமாக தீப்பிடித்ததா என்ற கோணத்தில் கிளிநொச்சி தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் குறித்த பகுதிக்கு வந்து தமது நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.