வங்கக்கடல் தாழமுக்கம் சூறாவளியாக மாற வாய்ப்பில்லை

இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் சற்று வலுப் பெற்று தாழமுக்கமாக மாற்றமடைந்ததுடன் அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

எனினும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சூறாவளியாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றுள்ள போதும் எந்த திசையை நோக்கி நகரும் என்பது தொடர்பாக இன்று எதிர்வு கூற முடியுமென வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு காரணமாக நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

குறிப்பாக வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடும்.

வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பொத்துவிலிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 30,-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் தென்மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து காற்று வீசுவதுடன் காற்றின் வேகமானது மணிக்கு 20-,30 கிலோ மீற்றர் வரை இருக்கும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.