போதை வெறிகொண்ட தந்தையினால் கொடூரமாக கடியுண்ட 5 வயதுச் சிறுவன்

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் போதை வெறிகொண்ட தந்தையினால் கொடூரமாக கடியுண்ட 5 வயதுச் சிறுவன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இணுவில் பகுதியில் வசிக்கும் ஒருவர் அதிகபோதை தலைக்கேறிய நிலையில் தனது பெற்ற மகனையே கோரமாக கடித்துள்ளார். இவ்வாறு இதன் காரணமாக குறித்த சிறுவன் கை , முதுகு , முகம் எனப் பல இடங்களிலும் கோரமான கடிக் காயங்களிற்கு இலக்காகியுள்ளான்.

இதன் காரணமாக சிறுவன் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனையடுத்து உடனடியாக சுன்னாகம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டினைப் பதிவு செய்த பொலிசார் சிறுவனின் தந்தையை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனின் உடல்களில் ஏற்பட்ட காயங்களிற்கு சிகிச்சையளிக்கப்படுவதோடு தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது