தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த அவுஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 04 ஓட்டத்தினால் இந்தியாவை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியை பதவி செய்தது.

 

பிரிஸ்போனில் ஆரம்பமான இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு அவுஸ்திரேலிய அணியை பணித்தார்.

அதன்படி அவுஸ்திரேலிய அணி ஆடுகளம் நுழைந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடி வரும் போது 16.1 ஓவரில் 153 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சற்று நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் மழை விட்டதும் ஆட்டம் ஆரம்பிக்க போட்டி 17 ஓவராக மட்டுப்படுத்தப்பட்டது.

இறுதியாக அவுஸ்திரேலிய அணி 17 ஓவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை குவித்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக மெக்ஸ்வெல் 24 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 46 ஓட்டங்களையும், மார்க் ஸ்டாய்னிஸ் 19 பந்துகளில் 3 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக 33 ஓட்டங்களையும் கிறிஸ் லெய்ன் 24 பந்துகளில் 3 நான்கு ஓட்டம் அடங்கலாக 37 ஓட்டத்தையும் அதிகப்படியாக பெற்றுக் கொண்டனர்.

 

பந்து வீச்சில் இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும், பும்ரா மற்றும் கலீல் அஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

அவுஸ்திரேலியா 158 ஓட்டங்களை எடுத்தாலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 17 ஓவரில் 174 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

 

174 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 4 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

அணி சார்பாக தவான் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 42 பந்துகளில் 10 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக 76 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 13 பந்துகளில் 4 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 30 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக அடம் ஷாம்பா, மார்கஸ் ஸ்ட்னினிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ஜேசன் பெரண்டோப், பில்லி ஸ்டான்லேக், அண்ரீவ் டை, ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.