ஸ்மித், வோர்னர் தண்டனையைக் குறைக்க முடியாது – ஆஸி. திட்டவட்டம்

பந்தைச் சேதப்படுத்திய குற்றத்துக்காக தடைசெய்யப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களின் தண்டனையைக் குறைக்க முடியாது என அந்நாட்டு கிரிக்கெட் போர்ட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதற்குக் காரணமாக இருந்தவர் வார்னர் என்றும் கேப்டன் ஸ்மித் தெரிந்தும் இதனைத் தடுக்க முயலவில்லை என்றும் விசாரணையில் தெரிந்தது.

பல கிரிக்கெட் ரசிகர்களின் கண்டனத்தின் எதிரொலியாக ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டும் பான்கிராப்ட்டிற்கு 9 மாதங்களும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தடை விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

ஆஸ்திரேலிய அணியின் தூண்களாகத் திகழ்ந்த ஸ்மித், வார்னர் இல்லாமல் அந்த அணி படுதோல்விகளை அடைந்து வருகிறது. இதனால் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அவர்கள் மீதான தடையை ஓராண்டுக்கு முன்பே நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களின் சங்கம் இதனை அந்நாட்டு கிரிக்கெட் போர்டுக்குப் பரிந்துரை செய்தது.

இந்நிலையில், செவ்வாயக்கிழமை கூடிய அந்நாட்டு கிரிக்கெட் போர்டு   ஸ்மித், வார்னர் ஆகியோரின் தண்டனையைக் குறைப்பது பற்றி ஆலோசித்துள்ளது. இதன் முடிவில் இருவரும் முழு தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் எனவும் தடைக் காலத்தை குறைக்க முடியாது எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து பேட்டி அளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் எட்டிங்ஸ்  “மூன்று வீரர்களுக்கு விதித்த தடையில் மாற்றம் செய்வது முறையல்ல.” எனக் குறிப்பிட்டுள்ளார்.