காதலியோடு பிரச்சனை: நான்கு பேருக்கு எமனான காதலன்!

அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மருத்துவர், பொலிஸ் அதிகாரி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சிகாகோ நகரில் உள்ள மெர்சி மருத்துவமனைக்குள் உள்ளூர் நேரப்படி மாலை 3 மணியளவில் நுழைந்த இளைஞர் ஒருவர் அங்குள்ள வாகனம் நிறுத்தும் பகுதியில் பெண் மருத்துவருடன் பேசிக்கொண்டிருந்தார். குறித்த மருத்துவர் அந்த இளைஞரின் முன்னாள் காதலி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதாக கூறப்படும் நிலையில் குறித்த மருத்துவர் கோபமாக அந்த இளைஞரை நோக்கி சத்தமாக பேசியுள்ளார்.

இதனைக் கேட்டு அந்த மருத்துவரின் தோழி வெளியே வந்து இருவருக்குமிடையே சமரசம் பேச முயன்றுள்ளார்.

அத் தருணத்தில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து குறித்த இளைஞர் மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியான தோழி உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று மருத்துவமனைக்குள் ஓடினார்.

அதற்குள் அந்த பெண் மருத்துவரை அந்த இளைஞர் சரமாரியாகச் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அவர் உயிரிழந்தார்.

அத்துடன் குறித்த தாக்குதல்தாரி மருத்துவ பெண் உதவியாளரையும் சுட்டதில் அவரும் உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து வந்த பொலிசார் அந்த இளைஞரை பிடிக்க முயற்சி செய்த போது பொலிசாரை நோக்கி குறித்த இளைஞன் சுட்டதில் சம்பவ இடத்திலேயே பொலிஸ் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து பொலிசாருக்கும் அந்த இளைஞருக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அந்த இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.