ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு விபத்தில் ஏற்பட்ட சோகம்!

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹொரவ்பொத்தானை பிரதான வீதி முதலியார் குளம் பகுதியில் குறித்த விபத்து நேற்று (9) மாலை இடம்பெற்றுள்ளது.

வேனொன்றும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் மொறவெவ, குணவர்தனபுர சாதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான சமந்த சில்வா (34 வயது) அவரது மனைவியான அனூஷா டில்றுக்சி (26 வயது) மற்றும் பிள்ளைகளான மின்சர (09 வயது) சாரணி (03வயது) எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மொறவெவ பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த வேன் மோதுண்டதாகவும் ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, படுகாயமடைந்த நால்வரில் 26 வயதுடைய அனூஷா டில்றுக்சி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்துக்குள்ளான வேனின் சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.