பேரவைக் கூட்டத்துக்கு சென்ற- புளொட்டுக்கு அனுமதி மறுப்பு!!

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் கலந்துகொண்ட புளொட் அமைப்பின் பிரதிநிதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மருத்துவர் லக்ஸ்மன் அவர் களை வெளியேற்றினார் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் யாழ்ப் பாணம் கந்தர்மடத்தில் உள்ள பேரவையின் அலு வலகத்தில்
நேற்று மாலை 3 மணிக்கு நடைபெற்றது.
புளொட் அமைப்பின் தலைவர் சித்தர்த்தன் கொழுப்பில் உள்ளமையால் அந்த அமைப்பின் செயலர் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் சிவநேசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் கூட்டம் ஆரம்பிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் இது தொடர்பில் தெரிவித்ததாவது,-
பேரவையின் ஆரம்ப நிகழ்வில் எமது அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் என்னையும் அமைப்பின் செயலரையும் அங்கத்துவ உறுப்பினர்களாக எழுத்து மூலமாக இணைத்தலைவர்களுக்கு அறிவித்து இருந்தார். பேரவையின் கடந்த கால கூட்ட்ங்களில் கூட நாம் கலந்து கொண்டிருந்தோம்.

எமது அமைப்பின் தலைவர் வரமுடியாத சந்தர்ப்பங்களில் நாம் கலந்து கொள்வது வழமையாகும். அவ்வாறே நேற்றைய கூட்டத்துக்கும் நாம் சென்றிருந்தோம். நாம் உள்ளே அமர்ந்திருந்தோம். அங்கு வந்த ஒருவர் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்தியர் லக்ஸ்மன் எம்மை அழைக்கின்றார் என்று கூறி அவரிடம் கூட்டி சென்றார்.

உங்களுக்கு இந்த கூட்டத்தில் அனுமதி இல்லை நீங்கள் வெளியேறுங்கள் என மருத்துவர் லக்ஸ்மன் தெரிவித்தார். நாம் வழமையாகக் கூட்டங்களில் கலந்துகொள்கின்றோம், திடீரென ஏன் எம்மை வெளியேற சொல்கின்றீர்கள் என்று கேட்டோம். இது நாம் எடுத்த முடிவு நீங்கள் இதில் கலந்து கொள்ள முடியாது என்றார். நாம் அங்கிருந்து வெளியேறி விட்டோம்.- என்றார்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் ஊடகப் பேச்சாளர்களான கலாநிதி சரவணபவன் மற்றும் புவிதரன் ஆகியோரிடம் கேட்ட போது,

புளொட் அமைப்பைச் சார்ந்தவர்கள் உரிய முறையில் அனுமதி பெறவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு சார்பில் அதன் தலைவர் க.சுரேஸ்பிரேமச்சந்திரன் தனது சகோதரனே கலந்துகொள்வார் என முற்கூட்டியே அறிவித்தபடியால் அனுமதிக்கப்பட்டார் என்றனர்.

அதேவேளை புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டமை தவறு என்று பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகின்றது. பேரவையின் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.