நாட்டை சீர்குலைக்கும் ஜனாதிபதியிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் நிலை – ஜயம்பதி விக்கிரமரத்ன

ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது அரசாங்கத்திடமிருந்து நாட்டினை மீட்டெடுப்பதற்காகவே 2015 ஆம் ஆண்டில் அனைவரும் ஒன்றிணைந்து போராடி மைத்திரிபால சிறசேனவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம்.

 

ஆனால் தற்போது ஜனநாயகத்தினை சீர்குலைக்கும் அவரிடமிருந்து நாட்டினைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பில் கருத்து வெளியிடும் வகையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

2015 ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கிய போது அவர் நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதி முறையினை இல்லாமல் செய்வார் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அவர் நிறைவேற்றதிகாரத்தினை மாத்திரமன்றி, ஜனாதிபதி ஒருவருக்கு இல்லாத அதிகாரங்களையும் பயன்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றார். இவ்வாறான ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் விரோதமான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.