3 நாள் கூடிய பாராளுமன்றத்திற்கான செலவு 8 கோடி ரூபா

பாராளுமன்றத்தில் ஒரு நாளைக்கு ஏற்படும் செலவு 2 கோடியே 53 லட்சம் என அங்குள்ள தகவல் அறியும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் 95 சபை அமர்வுகள் நடாத்தப்பட்டுள்ளன. இதற்காக வேண்டி 245 கோடிக்கும் அதிகமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு பாரிய மக்கள் பணம் செலவு செய்து கூட்டப்படும் பாராளுமன்ற கூட்டங்களில் அறிவார்ந்த விவாதங்கள் நடாத்தப்படாதது கவலைக்குரிய விடயம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

செலவு செய்யப்படும் நிதியை பார்க்கும் போது கடந்த மூன்று பாராளுமன்ற அமர்வுகளுக்கும் சுமார் எட்டுக் கோடி ரூபா பொது மக்களின் பணத்தை செலவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்பவர்களினால் மக்களின் பணம் வீண்விரயம் செய்யப்படுகின்றது.

அடித்துக் கொள்வதற்கு பாராளுமன்றத்துக்கு வருகை தரத் தேவையில்லை. வெளியில் வேண்டியளவு அடித்துக் கொள்ளலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்ட ஒழுங்குகளுக்கு ஏற்ப மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க மக்கள் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருதானையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.