24 ‘ரோமியோ’வகை ஹெலிகாப்டர்கள்’அமெரிக்காவிடம் இருந்து வாங்க மத்திய அரசு திட்டம்

டெல்லி: அமெரிக்காவிடம் இருந்து ஏறத்தாழ 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் 24 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை சமாளிக்கும் வகையில் ‘ரோமியோ வகை ஹெலிகாப்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவை எதிர்கொள்வதற்கு இத்தகையை நவீன ஆயுதங்கள், வசதிகள் கொண்ட ஹெலிகாப்டர் இந்திய கடற்படைக்கு தேவையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

24 நவீன ஹெலிகாப்டரை உடனடியாக வழங்குமாறு கேட்டு இந்தியா தரப்பில் இருந்து அமெரிக்காவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பான ஒப்பந்தம் இன்னும் சில மாதங்களில் கையெழுத்தாகலாம் என்றும் வரும் 30 ஆம் தேதி அர்ஜெண்டினாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிடம் இந்தியா வாங்க திட்டமிட்டுள்ள எம்எச் – 60 ரக ஹெலிகாப்டர்கள், ஸிகோர்ஸ்கி – லாக்ஹீட் மார்டின் நிறுவனத் தால் தயாரிக்கப்படுகின்றது. இந்த வகை ஹெலிகாப்டர்கள் எப்.எம்.எஸ். எனப்படும் வெளிநாட்டு ராணுவங்களுக்கான சிறப்பு திட்டம் மூலம் பிற நாடுகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன.கடந்த 2007 முதல் 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த வகை ஹெலிகாப்டர்களை அமெரிக்கா பிற நாடுகளுக்கு விற்றுள்ளது. இதற்கு முன் சி – 130ஜே – சூப்பர் ஹெர்குலஸ் போர் விமானங்கள், எம் 777 அல்ட்ராலைட் போர் விமானங்கள் போன்றவற்றை, எப்.எம். எஸ்., முறையில், அமெரிக்காவிடம் இருந்து, இந்தியா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.