சந்திரிகா-மோடி சந்திப்பு

மாலைதீவில் புதிய அதிபர் இப்ராகிம் சோலி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்கும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் மாலைதீவின் புதிய அரசாங்கம் பதவியேற்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முன்னதாக, பிரதமர் மகிந்த ராஜபக்ச, இந்த நிகழ்வில் பங்கேற்பார் என்று அவரது தனிப்பட்ட செயலர் கூறியிருந்தார். எனினும் மகிந்த ராஜபக்ச இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம, மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் மாத்திரம் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் விருந்தினர்களுக்காக போடப்பட்ட ஆசனங்களில் முன்வரிசையில் இந்தியப் பிரதமர் மோடியுடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிகள் கயூம், நசீட் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் சந்திரிகாவுடன் இந்தியப் பிரதமர் கலந்துரையாடினார்.

இலங்கையின் அரசியல் நெருக்கடிகள் குறித்து சந்திரிகா குமாரதுங்க அண்மையில், காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.